×

ஆப்கானிஸ்தான் சவாலை சமாளிக்குமா இலங்கை?

கார்டிப்: ஐசிசி உலக கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை அணி இன்று பலப்பரீட்சையில் இறங்குகிறது.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க அணி தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த நிலையில், தனது 3வது லீக் ஆட்டத்தில் இந்திய  அணியுடன் நாளை மோத உள்ளது. கார்டிப் வேல்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் சந்திக்கின்றன.கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நியூசி. வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை  29.2 ஓவரிலேயே 136 ரன்னுக்கு சுருண்டது. தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் கருணரத்னே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்  எடுத்தார். குசால் பெரேரா 29, திசாரா பெரேரா 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப  ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 137 ரன் எடுத்து எளிதாக வென்றது. இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்த கப்தில் 73 ரன், மன்றோ 58 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். நடப்பு  சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் தனது முதல் லீக் ஆட்டத்தில் மோதிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 38.2 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரகமத் ஷா 43, கேப்டன் குல்பாதின் 31, நஜிபுல்லா 51, தவ்லத் 27, ஹஸ்மதுல்லா 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.  ஆஸி. அணி 34.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து வென்றது. கேப்டன் பிஞ்ச் 66, கவாஜா 15, ஸ்மித் 18 ரன்னில் வெளியேறினர். வார்னர் 89 ரன், மேக்ஸ்வெல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர்.இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. முதல் வெற்றியை ருசிக்க இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை: திமத் கருணரத்னே (கேப்டன்), சுரங்கா லக்மல், இசுரு உடனா, லசித் மலிங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), நுவன் பிரதீப், சுரங்கா லக்மல், ஜீவன் மெண்டிஸ், திசாரா பெரேரா, லாகிரு திரிமன்னே, ஜெப்ரி வாண்டர்சே, மிலிண்டா வர்தனா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா.

ஆப்கானிஸ்தான்: குல்பாதின் நயிப் (கேப்டன்), அஸ்கர் ஆப்கன், ஹமித் ஹசன், ஹஸ்ரத் ஸசாய், முகமது ஷாஷத் (விக்கெட் கீப்பர்), நஜிபுல்லா ஸத்ரன், ரகமத் ஷா, ஷமியுல்லா ஷின்வாரி, அப்தாப் ஆலம், தவ்லத் ஸத்ரன்,
ஹஷ்மதுல்லா ஷாகிதி, முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நூர் அலி ஸத்ரன், ரஷித் கான்.



Tags : Sri Lanka ,Afghanistan , Sri Lanka, challenge , Afghanistan?
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்