×

ஆவடியில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

ஆவடி: ஆவடி பகுதியை சுற்றியுள்ள சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இச்சாலை இணைக்கும் வகையில் நேரு பஜார் சாலை, புதிய ராணுவ சாலை, சி.டி.எச் சாலை உள்ளது. இந்த சாலைகளை  பயன்படுத்தி தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், மார்க்கெட், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம், ரயில் நிலையம், நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்  உள்ளிட்டவைகளுக்கு சென்று வர வேண்டும். மேற்கண்ட இடங்களுக்கு இச்சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,  பூந்தமல்லி சாலை - நேரு பஜார் சாலை சந்திப்பில் மாலை, இரவு வேளைகளில் ஷேர் ஆட்டோக்களை சாலையின் மத்தியில் நிறுத்தி சவாரிக்கு அழைக்கின்றனர். மேலும், இரு சாலைகளில் இருந்து  செல்லும் இரு சக்கர வாகன ஒட்டிகளும், மற்ற வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால் தனியார், அரசு துறை ஊழியர்கள் வீட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.  மேலும் இரவில் இச்சாலை சந்திப்பில்  ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் சிரமப்பட்டே சென்று வருகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் இரு வாகனங்களும் செல்ல முடியாததால் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகின்றன.

மேலும், நேரு பஜாரில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து காய்கறி கடைகள், பழக்கடைகள், துணிக் கடைகளும் ஏராளமாக உள்ளன. இதன் காரணமாகவும் அச்சாலை வழியாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பாதசாரிகளும் செல்ல  முடியவில்லை. மேலும், இச்சாலை வழியாக தான் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள், போராட்டங்கள், மறியல் உள்ளிட்டவைகளும் அடிக்கடி நடக்கின்றன. இதனாலும், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும்  அவதிப்படுகின்றனர். சமீபத்தில் தான் புதிய ராணுவ சாலையில் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றினர். இருந்த போதிலும் அதே இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகிவிட்டன.   இதனால் சாலை ஓரங்களில்  பாதசாரிகள் நடக்க முடியவில்லை. இவர்கள் சாலையிலேயே நடந்து செல்வதால் கனரக வாகனங்கள், லாரி,  பஸ்கள் மோதி பல்வேறு விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதே போல், சி.டி.எச் சாலைகளிலும் அமரர் ஊர்தி, தள்ளுவண்டி  கடைகளும் ஆக்கிரமித்து இருக்கின்றன.  எனவே, இனிமேலாவது அரசு துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து நேரு பஜார், பூந்தமல்லி சாலை, புதிய ராணுவ சாலை, சி.டி.எச் சாலையில் போக்குவரத்து இடையூறான வாகங்களை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




Tags : pedestrians ,roads ,crash , Avadi, Roads, Occupying
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...