சென்னை விமான நிலையத்தில் 56 லட்சம் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 56 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலம்  கோழிக்கோட்டைச் சேர்ந்த மனப் (31), சம்சூ (39) ஆகிய  இருவரும் சுற்றுலா பயணிகளாக துபாய் சென்று, திரும்பினர்.  அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடமைகளை சோதனையிட்டனர். அதில், எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள்  இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து  தீவிர சோதனை செய்தபோது, அவர்களது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இருவரிடமும் மொத்தம் 870 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ₹29 லட்சம்.  அவற்றை பறிமுதல்  செய்தனர்.

இதுபோல், குவைத்தில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திர  மாநிலம், கடப்பாவைச் சேர்ந்த ஜாபிக் (33) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் குவைத்துக்கு சென்று, சென்னை திரும்பினார். அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. அவர் இரண்டு மிக்சிகள் கொண்டு வந்திருந்தார். அதிகாரிகள் மிக்சி வைத்திருந்த பெட்டியை பிரித்துப் பார்த்தபோது, மிக்சி ஜாரின் அடிப்பாகத்தில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை  830 கிராம். அதன்  சர்வதேச மதிப்பு ₹27 லட்சம். அவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.× RELATED சென்னை விமான நிலையத்தில் 40 லட்சம்...