×

நந்தம்பாக்கத்தில் இப்தார் நிகழ்ச்சி ஓபிஎஸ் பங்கேற்பு; எடப்பாடி புறக்கணிப்பு

சென்னை: நந்தம்பாக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக சார்பாக இப்தார் விருந்து விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு இப்தார் விருந்தினை தொடங்கி வைத்தார். முன்னதாக, விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கிண்டி கத்திப்பாராவில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல்வரை வரவேற்க அதிமுகவினர் ஏராளமானோர் வழிநெடுகிலும் காத்திருந்தனர். போலீசாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் முதல்வர் விழாவில் பங்கேற்கவில்லை. இது, சிறுபான்மையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த விருந்தினை முதல்வர் திட்டமிட்டு புறக்கணித்ததாக அதிமுகவினர் கருதுகின்றனர். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இப்தார் விருந்தினை தலைமை ஏற்று நடத்தினார். விழாவில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், தனியரசு, ஜெகன்மூர்த்தி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன், ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்தார் விருந்தை தொடங்கி வைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, “அதிமுக ஆட்சி தொடர வேண்டுமென்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. அந்த வகையில்தான் இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றியை தந்துள்ளனர். ஏமாறுபவர்கள் எப்போதும் ஏமாற மாட்டார்கள். சிறுபான்மை மக்களை காக்கும் அரணாக எப்போதும் அதிமுக விளங்கும்” என்றார்.

Tags : Nandambakkam , Iftar show, OBS, participation
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...