×

பிஇ, பிடெக் ரேண்டம் எண் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 31ம் தேதி வரை பெறப்பட்டது. அதன்அடிப்படையில் ஜூன் 3ம்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்று தொழில் நுட்பக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, சென்னையில் உள்ள தொழில் நுட்பக் கல்வித்துறை வளாகத்தில் நேற்று மதியம் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலையில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 509 பொறியியல் கல்லூரிகளில் இருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கான கவுன்சலிங் நடந்தது. இந்த ஆண்டுக்கான கவுன்சலிங்கை தொழில் நுட்பக் கல்வித்துறை நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 22ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி மே 2ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரத் தொடங்கி மே 31ம் தேதி வரை 1 லட்சத்து 33  ஆயிரத்து 116 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 494 பொறியியல் கல்லூரிகள் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 இடங்கள் உள்ளன. இது தவிர 15 பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு கவுன்சலிங்கில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் அந்த கல்லூரிகள் படிப்படியாக மூடப்படும்.

இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு எண் வெளியிடப்படுகிறது. ரேண்டம் எண் 1795573657 ல் இருந்து தொடங்குகிறது. சமவாய்ப்பு எண்கள் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் செல்லும், அவர்களின் ரேண்டம் எண்களை இணைய தளம் மூலம் மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம். பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் கணினித்துறை பேராசிரியர்கள் கொண்ட தொழில் நுட்பக் குழுவினர் இந்த ஆண்டுக்கான கவுன்சலிங்கின் மென்பொருளை தயாரித்துள்ளனர். இந்த சேவை மையங்களில் 7ம் தேதி மதல் 12ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடக்கிறது. 17ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். 20ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்க உள்ளது. முதல் நாள் மாற்றுத்  திறனாளிகளுக்கும், 21ம் தேதி முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கும், 22ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடக்கும். 25ம் தேதி முதல் 28ம் ததி வரை தொழில் கல்வி மாணவர்களுக்கும், ஜூலை 3ம் தேதி முதல் 28ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சலிங் நடக்கிறது. இதையடுத்து துணைக் கவுன்சலிங் ஜூலை 29ம் தேதி முதல் நடக்கும். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை  மையங்களை பயன்படுத்தி  இதுவரை 7132 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு மாணவர்களும் இதில் பங்கேற்பதாலும் கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என இருந்தாலும் அவற்றை 200க்கு மாற்றி கணக்கு 100, இயற்பியல் 50, வேதியியல் 50 கணக்கிட்டு ரேங்க் போடப்படும். தொழில் கல்வியை பொறுத்தவரையில் கணக்கு பாடத்துக்கு 100, செய்முறை மற்றும் கருத்தியல் ஆகியவற்றுக்கு 100 என மதிப்பெண்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு கட்ஆப்பை ஒப்பிட்டு பார்க்க வழிவகை உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரையில் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதே அளவில் தான் படிக்கின்றனர். இன்ஜினியரிங்கா, கலை அறிவியலா, மருத்துவமா என்று தேர்வு செய்வதில்தான் வேறுபாடு இருக்கிறது.இந்த ஆண்டு 1,33,116 விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 42 ஆயிரத்து 755 இடங்கள் உள்ளன. இதில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை, அரசின் கட்டண வீத அடிப்படையில் கவுன்சலிங் நடத்தி கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்டுள்ளன. இப்படி 29,393 கல்லூரிகள் தங்கள் இடங்களை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்திடம் ஒப்படைத்துள்ளன. இவற்றை ேசர்த்தால் 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 இடங்களுக்கு கவுன்சலிங் நடக்கும்.  கடந்த  ஆண்டு ஒரு லட்சத்து 17ஆயிரத்து 250 பேர் கவுன்சலிங்கில் பங்கேற்றனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : PE ,Ptech , BE, Bidech, Random Number
× RELATED போடி அருகே கோயில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை