×

கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது

மதுரை: நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் துவங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசார், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், விசாரணையை மதுரை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) மாற்றி கடந்த மே 8ல் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தன. அங்கு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி மத்திய சிறையில் இருந்து யுவராஜ், கோவை சிறையில் இருந்து அருண், சேலம் சிறையில் இருந்து 12 பேரும் நீதிபதி மீரா சுமதி முன் ஆஜர்படுத்தப் பட்டனர். பின்னர் விசாரணையை ஜூன் 7க்கு தள்ளி வைத்த நீதிபதி, விசாரணையை விரைவாக முடிக்க ஏதுவாக சேலம் சிறையில் உள்ளவர்களை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

Tags : murder ,court ,Madurai , Gokulraj, murder case, Madurai,
× RELATED ராக்கெட் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு