×

பொள்ளாச்சி நவமலை அருகே காட்டு யானை மீண்டும் அட்டகாசம் டிஎஸ்பி உயிர் தப்பினார்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நவமலை அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்  செய்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானையை விரட்ட சென்ற டிஎஸ்பியை யானை துரத்தியபோது நூலிழையில் உயிர்பிழைத்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி  அருகே உள்ள நவமலை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக ஒற்றை காட்டு  யானை குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த மாதம் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த ஏழு வயது  சிறுமி ரஞ்சனி மற்றும் மாகாளி என்ற இரண்டு பேரை இந்த காட்டு யானை தாக்கி  கொன்றது. இதையடுத்து, காட்டுயானையை விரட்ட வனத்துறையினர் டாப்சிலிப்  கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து பரணி, சுயம்பு ஆகிய இரண்டு கும்கி  யானைகளை வரவழைத்தனர். தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டு யானை ஊருக்குள்  புகாமல் இருக்க கும்கி யானைகள் கொண்டு காட்டு யானையை விரட்டி வந்தனர்.
இந்நிலையில் ஒற்றை காட்டு யானை ஆழியார் புளியங்கண்டி பகுதிக்கு  இடம்பெயர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு மீண்டும் வனப்பகுதியில் இருந்து  வெளியே வந்த ஒற்றை யானை, ஆழியார் நகர் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால்  குடியிருப்புவாசிகள் பீதியடைந்தனர். தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர்,  விடிய விடிய  காட்டு யானையை ஊருக்குள் இருந்து விரட்டும் பணியில்  ஈடுபட்டனர். ஆழியார் நகர் பொதுப்பணித்துறை குடியிருப்பிலிருந்து ஒற்றை  யானையை வனத்துறையினர் ஆழியார் வால்பாறை ரோடு வழியாக  நள்ளிரவு வரை விரட்டிச் சென்று மங்கரை வனப்பகுதிக்கு  விரட்டினர். தகவலறிந்து வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன்  தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று காட்டு யானையை விரட்டினர். அப்போது டிஎஸ்பியை நோக்கி காட்டு யானை திடீரென ஆவேசத்துடன் ஓடிவந்தது.  இதைப்பார்த்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் காட்டு  யானையை விரட்டியடித்தனர். இதனால் டிஎஸ்பி., விவேகானந்தன் உயிர்  தப்பினார்.

Tags : Pollachi Navamalai , Pollachi, Navamalai, wild elephant, DSP
× RELATED திருமணிமுத்தாற்றில் கழிவுகள்...