×

சேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து 17 கிராமங்களில் உண்ணாவிரதம்

சேலம்: சேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து வாய், கண்ணை கட்டிக்கொண்டு விவசாயிகள் 17 கிராமங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலைக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், ஏரி, குளங்கள், மலைகளை அழிக்கவுள்ளனர். இந்த பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த மாநில வருவாய்த்துறை அதிகாரிகள், கடந்த சில மாதங்களுக்கு முன் நிலத்தை அளவீடு செய்து முட்டுக்கல் நட்டனர். அப்போது, போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 5 மாவட்டங்களிலும் விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே விவசாயிகள் தரப்பில், 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8 வழிச்சாலைக்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவுக்குப்பின் மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையகம் சார்பில் 8 வழிச்சாலை அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5  மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விளை நிலங்களில் இறங்கி கருப்பு கொடி போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் உருவாக்கிய உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம் சார்பில் நேற்று, பாதிக்கப்படுகின்ற 17 கிராமங்களிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விளை நிலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் உத்தமசோழபுரத்தில் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதேபோல், ஆச்சாங்குட்டப்பட்டியில் விவசாயிகள், தங்கள் கைகளில் 8 வழிச்சாலை வேண்டாம் என வலியுறுத்தி தட்டிகளை வைத்திருந்தனர். ராமலிங்கபுரத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்கள், கண்ணில் கருப்பு துணிகளை கட்டியிருந்தனர். தங்களின் தொடர் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல், விவசாய நிலத்தை அழிக்க முற்படுவதை வெளிக்காட்ட கண்ணை கட்டிக்கொண்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அரசை கண்டித்து கோஷமிட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாயத்தை அழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது. அவர்களின் எண்ணம் நிறைவேறாது. தான் ஒரு விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 8 வழிச்சாலையை அமைத்தே தீருவேன் என இருப்பது வேதனையளிக்கிறது. அவர், தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த 8 வழிச்சாலை அமைந்தால், விவசாய நிலங்கள், காடுகள் அழிந்து, அங்கு வாழும் உயிரினங்களும் மடியும். அவ்வாறு நடந்தால், நாட்டில் மழை பெய்யாமல் போகும். கடும் வறட்சியை சந்திக்க நேரிடும். அதனால், எங்களது எதிர்ப்பை தொடர்ந்து போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்துவோம். உச்ச
நீதிமன்றத்தில் அரசின் மேல்முறையீடு வழக்கை சட்டரீதியாக சந்தித்து, வெற்றி பெறுவோம். விவசாய நிலத்தை காத்திடுவோம்,’’ என்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவு நம்பிக்கை தருகிறது

சென்னை உயர்நீதிமன்ற தீர்பை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையகம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மல்கோத்ரா அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. மேலும், முறையாக எந்த அறிவிப்பாணையையும் வெளியிடாமல், நிலத்தை மட்டும் எந்த அடிப்படையில் கையகப்படுத்தினீர்கள் என மத்திய, மாநில அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிபதிகளின் இந்த உத்தரவு, சேலத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘‘எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் தவறு நடத்துள்ளதை நீதிபதிகள் உணர்ந்துள்ளனர். அதனால், நீதி நிச்சயம் வெல்லும். உச்சநீதிமன்றத்தில் விவசாயத்தை காக்கும் வகையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தற்போதைய நீதிபதிகளின் உத்தரவும் நம்பிக்கை தருகிறது,’’ என்றனர்.

Tags : villages ,Salem , 8 pavilion, fasting
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்