×

96வது பிறந்த நாள் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: கலைஞரின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலை மற்றும் அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திமுகவினர் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலைஞரின் 96வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு சென்றார். அங்கு கலைஞரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்திலும், அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர்தூவி வணங்கினார்.
பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் எம்எல்ஏக்கள் கே.என்.நேரு, பொன்முடி, சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவ படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் தங்கபாலு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டவர்களும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வைகோ கூறுகையில், ‘‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று உறுதி ஏற்போம்’’ என்று கூறினார்.இதே போல மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர்.

Tags : MK Stalin ,memorial ,artist , Artist, MK Stalin, Respect
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...