×

மணல் கொள்ளை தடுத்தவர் படுகொலை கொலையாளிகளை கைது செய்ய கலெக்டர் முகாம் ஆபீசில் முற்றுகை

* உறவினர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
* ராமநாதபுரத்தில் தொடரும் பரபரப்பு

ராமநாதபுரம்: கண்மாயில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் கலெக்டர் முகாம் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் அருகே இளமனூர் புரண்டி கண்மாயில் அதிகமான ஆழத்தில் மணல் அள்ளுவதை தடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் மோகன், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். கொலை கும்பல் தாக்கியதில் காயமடைந்த நான்கு பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் லெட்சுமணன் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குற்றவாளிகளை பிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, அரசு மருத்துவமனை ரோட்டில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பாக நேற்று காலை முற்றுகையிட்டு மோகனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது திடீரென மோகனின்  உறவினர்கள் மணிகண்டன் (21), முத்துப்பாண்டி (23) ஆகியோர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

மற்றவர்கள் தண்ணீரை ஊற்றி தடுத்தனர். பின்னர் மோகனின் உறவினர்கள் 10 பேர் கலெக்டர் வீரராகவ ராவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் வீரராகவ ராவ், மோகனின் உறவினர்களிடம் குற்றவாளிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பின் மறியலை கைவிட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் சந்தித்து, உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

வாலிபர் சரண்:
முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் மோகன் கொலையில் தொடர்புடைய ராமநாதபுரம் அருகே மஞ்சள் ஓடை மரப்பாலம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (30) சென்னை அருகே மதுராந்தகம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Siege ,camp office ,Collector ,sand robbery ,murderers , Sand robbery, detainee assassination, assassin, arrest
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...