×

சந்திரபாபு நாயுடு கொடுக்க மறுத்து வந்த ஆந்திர மாநில அரசு கட்டிடங்கள் தெலங்கானாவிடம் ஒப்படைப்பு: ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கவர்னர் உத்தரவு

ஐதராபாத்: ஐதராபாத்தில் பயன்படுத்தாமல் உள்ள ஆந்திர மாநில அரசு கட்டிடங்களை தெலங்கானாவுக்கு மறுஒதுக்கீடு செய்து கவர்னர் நரசிம்மன் விடுத்துள்ள உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திரா-தெலங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு 10 ஆண்டுகள் வரை (2024, ஜூன் 1ம் தேதி வரை) ஐதராபாத் பொது தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்பின், ஐதராபாத் தெலங்கானாவின் தலைநகராக இருக்கும் எனவும், ஆந்திராவுக்கு புதிய தலைநகர் அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்காக பிரிவினையின்போது, இரு மாநிலங்களுக்கு சம அளவில் அரசு அலுவலகங்களுக்கான கட்டிடங்கள் ஐதராபாத்தில் ஒதுக்கப்பட்டன.

இதற்கிடையே, முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதியை அறிவித்தார். அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள் மாற்றப்பட்டன. ஆனாலும், ஐதராபாத்தில் ஒதுக்கப்பட்ட அரசு கட்டிடங்களை காலி செய்ய சந்திரபாபு நாயுடு மறுத்தார்.

10 ஆண்டுகளுக்கு உரிமை இருப்பதால் அக்கட்டிடங்களை தெலங்கானாவுக்கு விட்டுத் தராமல் விடாப்பிடியாக இருந்தார். பயன்படுத்தாமலேயே அக்கட்டிடங்களுக்கு ஆந்திர அரசு மின்சார கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவை செலுத்தி வந்தது. ஆந்திராவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கான கவர்னர் நரசிம்மன் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் பயன்படுத்தாமல் இருப்பதால் பாழடைந்துள்ளன. எனவே, அவற்றை தெலங்கானாவுக்கு மறுஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த உத்தரவு இரு மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.  

கவர்னரின் இந்த உத்தரவை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்றுள்ளார். இது இரு மாநிலங்கள் இடையே நல்லுறவை வளர்ப்பதற்கான அடையாளமாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தில் ஒதுக்கப்பட்ட அரசு கட்டிடங்களை காலி செய்ய சந்திரபாபு நாயுடு மறுத்தார். 10 ஆண்டுகளுக்கு உரிமை இருப்பதால் அக்கட்டிடங்களை தெலங்கானாவுக்கு விட்டுத் தராமல் பிடிவாதமாக இருந்தார்.

Tags : Andhra Pradesh ,state government buildings ,Telangana ,land , Chandrababu Naidu, refusing to pay, Andhra state, government buildings, Telangana, handing over
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...