×

வெளிநாடுகள் செல்ல வதேராவுக்கு அனுமதி: லண்டன் செல்ல ராகுலுக்கு தடை

புதுடெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கை எதிர்கொண்டு வரும் ராபர்ட் வதேரா, வெளிநாடு செல்வதற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் ரூ.18 கோடியில் சொத்துகளை வாங்கினார். இதில், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, அவருடைய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரியும் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரம், விசாரணைக்காக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ஏற்று, கடந்த வாரம் டெல்லி அலுலவகத்தில் வதேரா ஆஜரானார். இந்நிலையில், வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க கோரி வதேரா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார்  மேத்தா மற்றும் வழக்கறிஞர் நிதேஷ் ராணா ஆகியோர் அரசு சார்பில் ஆஜராகி, ‘வதேரா வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று வாதிட்டனர். வதேரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கேடிஎஸ் துல்சி, “லண்டன் செல்வதற்கு ஏற்கனவே அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் வதேரா லண்டன் செல்ல மாட்டார்,” என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘‘அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு செல்வதற்கு வதேராவுக்கு 6 வாரம் அனுமதி அளிக்கப்படுகிறது. தனது பயணம் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் அவர் சமர்பிக்க வேண்டும். வதேராவும், அவரது மைத்துனரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியும்  லண்டன் செல்லக் கூடாது,” என்று உத்தரவிட்டார்.

Tags : Vadra ,Ban on Rahul ,London , Overseas, go to Vadra, permission, go to London, ban Rahul
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...