×

காப்பக சிறுமிகள் பலாத்கார, கொலை வழக்கு விசாரணையை முடிக்க சிபிஐக்கு 3 மாதம் கெடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘பீகாரில் காப்பக சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 3 மாதத்திற்குள் அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும்’ என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவியுடன் இயங்கி வந்த சிறுவர்கள் காப்பகத்தில் தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்தாண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், 11 சிறுமிகள்  பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதும் தெரிய வந்தது. நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் குறித்து, முதலில் மாநில போலீசார் விசாரித்தனர். பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் கடந்த மாதம், சிபிஐ தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘காப்பகத்தில் இருந்த 11 சிறுமிகள், பிரஜேஷ் தாகூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஜூன் 3ம் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று சிபிஐ.க்கு உத்தரவிட்டது. ஆனால், ‘2 வாரத்தில் விசாரணையை முடிக்க முடியாது’ என்று சிபிஐ தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, எம்ஆர்.ஷா தலைமையிலான விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘11 சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது குறித்த முழு விசாரணையையும் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். மேலும், இந்த சம்பவத்தில் வெளியாட்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா என்றும் விசாரிக்க வேண்டும். விசாரணை விவரங்கள் முழுவதையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அனைத்தும் தொடர்பான அறிக்கைகளை 3 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Tags : Supreme Court ,CBI , Archana girls, rape, murder case, trial, CBI to complete, 3 month deadline
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...