எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு மீண்டும் வாக்குசீட்டு முறையை கொண்டு வர ஒன்றிணைவோம்

கொல்கத்தா: மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகத்தை கிளப்பி இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்க வேண்டும்’’ என அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22, பாஜ 18 இடங்களில் வெற்றி பெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் மாநில அமைச்சர்கள், கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய மம்தா, பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றிய விவரங்களை வெளிக்கொண்டு வர உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும். நாம் ஜனநாயகத்தை காக்க வேண்டும். எனவே நமக்கு இயந்திரங்கள் தேவை இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதற்கான இயக்கம் தொடங்கப்பட வேண்டும், அது மேற்கு வங்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்.

மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர 23 எதிர்க்கட்சிகளும் இணைந்து வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்கா போன்ற நாடுகள் கூட மின்னணு இயந்திரங்களை தடை செய்துள்ளன. மேற்கு வங்கத்தில் இடது முன்னணி கட்சிகளால் தான் பாஜவால் 18 இடங்களை கைப்பற்ற முடிந்தது. அதிலும், பாஜ கூறியபடி 23 இடங்களை அவர்களால் எட்ட முடியவில்லை. எங்களுக்கு 4 சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mamata ,opposition parties , Mamta's call for the opposition, the re-voting system, together
× RELATED இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த...