விழுப்புரம் முதல் நாகை வரையிலான 4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தரக்கோரி முற்றுகை: நாகை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

நாகை: விழுப்புரம் முதல் நாகை வரையிலான 4 வழிச்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி நாகையில் உள்ள நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் தொடங்கி நாகை வழியாக தூத்துக்குடி வரை 2 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன் பின்னர் இந்த திட்டம் 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக விழுப்புரத்தில் இருந்து நாகை வரையிலும், இரண்டாம் கட்டமாக நாகையில் இருந்து தூத்துக்குடி வரையிலும் சாலைகள் போடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2006ல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் நாகை அருகே மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவிலான பாலம் அமையவுள்ளது. இதற்காக நில உரிமையாளர்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் நிலத்தை எடுத்துள்ளனர். மேலும் 1 சதுர அடிக்கு மிகவும் குறைவான விலையை கணக்கீடு செய்து நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மஞ்சக்கொல்லை, ஐவ்வந்நல்லூர், அந்தனப்பேட்டை பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று நாகை நாகநாதசன்னதி தெருவில் உள்ள நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த தாசில்தார் ராகவனிடம் நில உரிமையாளர் அனுமதி இல்லாமல் சாலை அமைக்க நிலத்தை அபகரிப்பு செய்துள்ளது தவறு. அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் படி சதுரஅடி ஆயிரம் ரூபாய் ஆகும்.

அரசின் வழிகாட்டுதல் மதிப்பீடு தொகையோடு 4 மடங்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். ஆனால் நில உரிமையாளர்கள் வங்கி கணக்கில் சதுர அடி ரூ.40 என கணக்கீடு செய்து வரவு வைக்கப்பட்டுள்ளது. இது நில உரிமையாளர்களை மோசடி செய்வதாகும் என்று கோஷம் எழுப்பி முற்றுகையிட்டனர். சுமார் 2 மணி நேரம் முற்றுகை போராட்டத்திற்கு பின்னர் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நில எடுப்பு தாசில்தார் ராகவன் உங்களது கோரிக்கையை மேலிடத்திற்கு எடுத்து சொல்கிறேன் என்றார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories:

More
>