மதுரையில் பயங்கர சம்பவம் கூலிப்படை ஏவி பைனான்சியரை கொன்ற இரண்டாவது மனைவி, மகள் கைது: திடுக்கிடும் வாக்குமூலம்

அலங்காநல்லூர்: மதுரை அருகே பைனான்சியரை, அவரது இரண்டாவது மனைவி மற்றும் மகளே கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் - பாலமேடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (55). பைனான்சியரான இவர், விவசாயம் செய்து வந்தார்.

கடந்த 1ம் தேதி இளங்கோவனை இரு டூவீலர்களில் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த இளங்கோவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் தனிப்படை போலீசார், 3 பிரிவுகளாக  குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொலையான இளங்கோவனுடன் வசித்து வந்த அவரது இரண்டாவது மனைவி அபிராமி (38), அவரது மகள் அனுசுயா (21) ஆகியோர் கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொலை செய்ததாக, ஊர்சேரி கிராம நிர்வாக அலுவலர் காளிராஜூக்கு புகார் வந்தது.

இதையடுத்து அவர் அலங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து தாய், மகள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அனுசுயாவின் உறவினரான புதூர் பாலமுருகன் உள்ளிட்ட கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரணம் என்ன?: கைது செய்யப்பட்ட இளங்கோவனின் இரண்டாவது மனைவி அபிராமி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்துகள் வாங்கியதில் அபிராமி, அனுசுயாவிற்கு இளங்கோவன் எதுவும் கொடுத்து உதவவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக அனுசுயாவிற்கு இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பலமுறை இதுகுறித்து அவரிடம் அபிராமி எடுத்துக்கூறியும் இளங்கோவன் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அத்துடன் அனுசுயாவின்  திருமண செலவிற்கும் இளங்கோவன் உதவவில்லை. இதனால் 6 மாதத்திற்கு முன்பு அவரை கொலை செய்ய அபிராமி, அனுசுயா முயற்சி செய்துள்ளனர். அதில் தப்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி அவர் வீட்டிலிருக்கும் தகவலை கூலிபபடையினருக்கு தெரிவித்து திட்டமிட்டபடி கொலை செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

Tags : merchant killer financier ,Madurai , Madurai, terrorist, mercenary, financier, wife and daughter, arrested
× RELATED ஆரோவில் சர்வதேச நகரில் பரபரப்பு மனைவி,...