×

7 பேரை விடுவிக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு அவகாசம்: ஆளுநரிடம் கேட்டு பதில் தர ஐகோர்ட் அனுமதி

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து, கேட்டு தெரிவிக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வார அவகாசம் கோரியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் தெரிவித்திருந்தது.  இதற்கிடையில், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை  செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ல் தொடர்ந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை குறித்து கேட்டு தெரிவிக்க 2 வார கால அவகாகம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையில் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம்  கோரியதை அடுத்து விசாரணையை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Governor ,Supreme Court ,release , 7 persons,case requested to release, Tamil Nadu Government, time, Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...