×

8 வழிச்சாலை தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்த வழக்கு விவகாரத்தில், உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டுள்ளது. சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டில் அறிவிப்பு அரசாணையை வெளியிட்டது. இந்த திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், மக்களின் இந்த எதிர்ப்புகளையும் மீறி தமிழக அரசு நில அளவீட்டை தொடங்கி கல் நடும் பணிகளை மேற்கொண்டது. இதனை எதிர்த்து சென்னை முதல் சேலம் வரையில் விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த திட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய வனங்கள் அழிக்கப்படுவதாகவும் விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பாமக இளைஞரணி தலைவரும், அப்போதைய தர்மபுரி எம்பியுமான அன்புமணியும் வழக்கில் மனுதாரராக இணைத்துக் கொண்டார். இந்த மனுவை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை. மேலும் அரசியலமைப்பின் நில அளவு சட்டமும் இந்த விவகாரத்தில் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. இதை தவிர இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் ஆணையத்தின் ஒப்புதலும் பெறவில்லை. அதனால் மேற்கண்ட சட்ட விதிமீறல்களை அடிப்படையாக கொண்டு 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் எட்டு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல், பாமக தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், “இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வாதத்தில், “மக்களிடம் எந்தவித கருத்தையும் கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இது அவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் ஒன்றாகும். அதனால் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எந்தவித இடைக்கால தடையும் விதிக்க முடியாது. சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் அதிக தவறுகள் இருப்பதை பார்க்க முடிகிறது. இதில் குறிப்பாக திட்ட அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நிறைய பேரிடம் நிலங்கள் வாங்கியதற்கான ஆதாரங்களும் உள்ளன. மேலும் திட்டத்திற்கான அனுமதி கிடைப்பதற்கு முன்பே நிலத்தை எடுத்து தரவுகளை எப்படி சேர்த்தீர்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமாக நீதிமன்றம் கருதவில்லை. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. அதனால் இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரர்களான மத்திய அரசு, தமிழக அரசு ஆகியோர் விளக்கமளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுகிறது’’ என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,Madras High Court , 8 Pavilion, Chennai High Court, Supreme Court
× RELATED இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓபிஎஸ் மனு