×

ஆத்தூர் ஒன்றியத்தில் திறக்கும் முன்பே இடியும் கழிவறைகள்

* பயனாளிகள் அதிர்ச்சி


செம்பட்டி : ஆத்தூர் ஒன்றியத்தில் தூய்மை பாரத திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் திறப்புவிழாவை காணும் முன் இடிந்து விழுவதால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில் அம்பாத்துரை, என்.பஞ்சம்பட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி, வீரக்கல், மணலூர், சித்தரேவு, ஆத்தூர், அய்யங்கோட்டை உட்பட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்படும் தனிநபர் கழிப்பறைகள் ஒப்பந்த அடிப்படையில் கட்ட விடுவதால், பலம் இழந்து இடிந்து வருகின்றன.

 மேலும் அரசு நிர்ணயித்தபடி தனிநபர் கழிப்பறை முறையாக கட்டாமல் ஹாலோபிளாக் மற்றும் தரமற்ற செங்கல்களை வைத்து கட்டுகின்றனர். மேற்கூரையில் பட்டா மற்றும் குழாய்கள் அமைத்து அதில் கூலிங் சீட்டுக்கள் (இரும்புசீட்) பொருத்தாமல் ஆஸ்பெட்டாஸ் சீட்டுக்கள் பொருத்தி வருவதால், காற்றடிக்கும் பொழுது மேற்கூரைகள் காற்றில் பறந்து செல்கின்றன. இதனால் தனிநபர் கழிப்பறை கட்ட பொதுமக்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமாலைப்பட்டியில் கோனூர் செல்லும் வழியில் 20 தனிநபர் கழிப்பறைகளை கூட்டுக் கழிப்பறைகளாக கட்டி உள்ளனர். கட்டிடம் கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கும் முன்பே, கடந்த வாரம் மேற்கூரைகள் (ஆஸ்பெஸ்டாஸ் சீட்) காற்றில் பறந்து சுக்குநூறாய் உடைந்துவிட்டன. இதில் 18 கழிப்பறைகள் மேற்கூரையில்லாமல் திறந்தவெளியாய் உள்ளன. இதை பார்த்த பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், ‘‘ஆத்தூர் ஒன்றியத்தில் கட்டப்படும் தனிநபர் கழிப்பறைகள் முறைப்படி கட்டப்படவில்லை. தரமற்ற முறையில் கட்டிக் கொடுப்பதால் ஒரு மாத காலத்தில் கதவுகள் பெயர்ந்து விடுகின்றன. அல்லது கட்டிடங்கள் விரிசல் விடுகின்றன. கூட்டுக் கழிப்பறைகளாக கட்டப்படும் கழிப்பறைகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் முன்பே இடிந்து வருகின்றன. இதற்கு காரணம் கழிப்பறைகளுக்கு தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதுதான்.

இதனால் பாரத பிரதம மந்திரியின் தூய்மை பாரத இயக்கம் ஆத்தூர் ஒன்றியத்தில் முடங்கும் திட்டமாக மாறி வருகிறது. மீண்டும் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பணமும் வீணாகி வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குநர் இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி கழிப்பறைகளை முறையாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : bathrooms ,Attur ,Union , sempatti,Toilets , clean india,damaged position
× RELATED ஆத்தூர் உழவர் சந்தையில் ஆடி அமவாசையை ஒட்டி 43 டன் காய்கறிகள் விற்பனை