×

ராமநாதபுரம் அருகே கண்மாயில் மணல் அள்ளியதை தட்டிக் கேட்ட மாஜி பஞ். தலைவர் வெட்டிக்கொலை

* மேலும் 4 பேர் படுகாயங்களுடன் அனுமதி
* உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கண்மாயில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவரை 10 பேர் கும்பல் வெட்டிக்  கொலை செய்தது. ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை, இளமனுரை சேர்ந்தவர் மோகன் (45). முன்னாள் பஞ்சாயத்து தலைவர். தற்போது கூலி வேலை பார்த்து  வந்தார். புரண்டி கண்மாய் பகுதியில் சிலர் மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து, இவர் நேற்று பிற்பகல் அங்கு சென்றுள்ளார். அவர்களிடம் அதிக ஆழத்திற்கு மணல் அள்ளாதீர்கள் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மோகனுடன் தகராறில்  ஈடுபட்டனர். அங்கு வந்த மோகனின் உறவினர்களும் மணல் அள்ளியவர்களை தடுத்தனர்.உடனே அவர்கள் கொடுத்த தகவலின்படி காரில் வந்த 10க்கும் மேற்பட்டோர், மோகன் மற்றும் அவரது உறவினர்களை அரிவாள், கத்தி, கம்பு  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். மோகனை அந்த கும்பல் கண்மாயில் கிடந்த தண்ணீரில் மூழ்கடித்தனர். பின்னர் தங்கள் காரிலேயே  தூக்கி சென்று ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை அவசரப் பிரிவில் சேர்த்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

மோகனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் மர்ம கும்பல் தாக்கியதில் கை, கால், தலை என  உடலின் பல்வேறு இடங்களில் காயமடைந்த லெட்சுமணன் (33), செல்வம் (40), முருகேசன் (42), சாத்தையா (44) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மோகனின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு நேற்று மாலை குவிந்தனர்.  கொலையாளிகளை கைது செய்யும் வரை ேமாகனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மருத்துவமனை முன்பு மதுரை - ராமேஸ்வரம்  சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மோகனை கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்வோம் என்று டிஎஸ்பி நடராஜன் உறுதியளித்தபின் போராட்டம் கைவிடப்பட்டது.  இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலையான மோகனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள், ஒரு  மகன் உள்ளனர்.

கேமராவில் சிக்கிய கொலையாளிகள்
 டிஎஸ்பி நடராஜன் கூறுகையில், ‘‘மோகனின் உடலை அரசு மருத்துவமனைக்கு காரில் கொண்டு வந்தவர்களின் படம், அங்கு வைக்கப்பட்டிருந்த  கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும். அதனை ஆராய்ந்து குற்றவாளிகளை கைது செய்வோம்’’ என்றார்.



Tags : pann ,Ramanathapuram , At Ramanathapuram,, Magic penguin, Vettikkalimaji
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...