×

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் அடுத்தடுத்த அடி காரு, வண்டி விக்கவே மாட்டேங்குது... வரிய குறைச்சா விலையாவது குறையும்: சியாம் வலியுறுத்தல்

புதுடெல்லி: வாகன விற்பனையை அதிகரிக்க உதவும் வகையில், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக  குறைக்க வேண்டும் என சியாம் வலியுறுத்தியுள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என மத்திய அரசின் அடுத்தடுத்த அதிரடிகளால் பாதிக்கப்பட்ட தொழிற்துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று.  போதாக்குறைக்கு, வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கொள்கை முடிவுகளால் வாகன விலை உயர்ந்து விற்பனையை பதம் பார்த்தது.  ஏறக்குறைய கடந்த ஓராண்டாகவே வாகன விற்பனையாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் சோதனை காலக்கட்டமாகவே அமைந்திருந்தது. கடந்த  மாத வாகன விற்பனையும் 25 சதவீதம் சரிந்து விட்டது.

 இந்நிலையில், நிதியமைச்சகம் ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில் ஆட்டோமொபைல் துறை பிரதிநிதிகள் கலந்து  ெகாண்டு, தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி உச்சபட்ச அளவான 28 சதவீதம் என  உள்ளது. இதை 18 சதவீதமாக குறைக்க வேண்டும். அப்போதுதான், வாகன விலை குறைந்து விற்பனை உயர வழி வகுக்கும். இதுபோல், மாசு  ஏற்படுத்தக்கூடிய பழைய வாகனங்களுக்கு பதில் புதிய வாகனம் வாங்கும் திட்டத்தை ஊக்கத்தொகையுடன் செயல்படுத்த வேண்டும். உள்நாட்டில் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்கள் மீதான  இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்  சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

வாகனங்கள் விற்பனை 25% சரிவு
கடந்த மே மாதத்தில் பயணிகள் வாகனங்களின் விற்பனை, அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களின் வாகனங்களும் சரிவை சந்தித்துள்ளன. சுமார்  25 சதவீதம் குறைந்து மொத்தம் 1,21,018 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. சிறிய ரக கார்களான ஆல்டோ, பழைய மாடல் வேகன் ஆர் ஆகியவற்றின்  விற்பனை 56.7 சதவீதமாக குறைந்து மொத்தம் 16,394 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் புதிய வேகன் ஆர், செலிரியோ,  இக்னிஸ், ஸ்விப்ட் ஆகிய கார்கள் விற்பனை 0.96 சதவீதமும், பலேனோ, டிசையர் கார்கள் 9.2 சதவீதமும், குறைந்துள்ளன. இந்த வகை கார்கள்  70,135 விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செடான் சியாஸ் கார் 10.7 சதவீதம் குறைந்து 3,592 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வேன்கள் விற்பனை 29.7 சதவீதம் குறைந்து 11,745  வேன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.கடந்த மாதத்தில் 2,232 இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு இதை காலக்கட்டத்தில் விற்பனை  செய்யப்பட்டதைவிட 31.1 சதவீதம் (1,703 வாகனங்கள்) அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : GST ,Siam , Monetary removal, successive, GST,Siam emphasis
× RELATED ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை...