×

கர்நாடகாவில் ஆட்சியை காப்பாற்ற 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி?: சித்தராமையா பரிந்துரைக்கு குமாரசாமி ஓகே

பெங்களூரு: கர்நாடகாவில் நடக்கும் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக, 2 சுயேச்சை எம்எல்ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க  சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இதற்கு முதல்வர் குமாரசாமியும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  பரமேஸ்வர் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையே காரணம் காட்டி இந்த  அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து, கூட்டணி ஆட்சியை வீழ்த்தும் முயற்சியில் பாஜ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கடந்த சில நாட்களாக முன்னாள் முதல்வர்  சித்தராமையா ஈடுபட்டு வந்தார்.  
இந்நிலையில், முதல் கட்டமாக கூட்டணி அரசுக்கு இடையூறாக இருப்பவர்கள் இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என்று கருதப்படுகிறது. இதனால்,  சுயேச்சைகளான ஆர்.சங்கர் மற்றும் என்.நாகேஷ் ஆகிய இருவரிடமும் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜவுக்கு ஆதரவு  அளிக்கவில்லை என்றால் அமைச்சர் பதவி அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். இவரின் உறுதி மொழியால் இரு சுயேச்சை எம்எல்ஏக்களும்  சமாதானம் அடைந்ததாக தெரிகிறது. சித்தராமையாவின் இந்த ஆலோசனையை  முதல்வர் குமாரசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநருக்கு தகவல் அனுப்பி, 6ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த  குமாரசாமி முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

17 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி
இரண்டு சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்க சித்தராமையாவும், குமாரசாமியும் முடிவு செய்துள்ளதற்கு காங்கிரஸ், மஜத எம்எல்ஏ.க்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘சுயேச்சைகளுக்கு மட்டும் பதவி அளித்து விட்டு, கட்சிக்காக பாடுபட்டவர்களை ஏமாற்றுவதா?’ என்று அவர்கள் கேள்வி  எழுப்பியுள்ளனர். இவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்கும் திட்டத்தை மட்டுமின்றி, அமைச்சரவை  விரிவாக்கத்தையே ரத்து செய்து விடலாம் என்று குமாரசாமியிடம் சித்தராமையா கூறி விட்டதாக தெரிகிறது.

Tags : Minister to minister ,independents ,Karnataka , Karnataka, 2 independents, Kumarasamy, Siddaramaiah's nomination
× RELATED கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்