×

உச்சி முதல் பாதம் வரை அலசி விடும் 84 விமான நிலையங்களிலும் முழு உடல் சோதனை கருவி: அடுத்த ஆண்டுக்குள் அமைக்க உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 84 விமான நிலையங்களில் 2020ம் ஆண்டுக்குள் முழு உடலையும் பரிசோதனை செய்யக்கூடிய ஸ்கேனர்  கருவிகளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விமான நிலையங்களில் தற்போது மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகள் பரிசோதனை செய்யப்படுகின்றனர். மேலும் பெல்ட், வாட்ச், லக்கேஜ்   உள்ளிட்டவை தனியாக ஸ்கேனரில் அனுப்பி சோதனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு பயணியை சோதனை செய்வதற்கு 2, 3 நிமிடங்கள்  ஆகின்றன. இந்நிலையில், சோதனை செய்யும் நேரத்தை குறைக்கும் வகையிலும், துல்லியமாக பரிசோதனை செய்யும் வகையிலும்,  முழு  உடலையும் ஸ்கேன் செய்யும் கருவியை அமைப்பதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த  சுற்றறிக்கை, விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை சார்பாக கடந்த ஏப்ரலில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள 84 விமான நிலையங்களில் இந்த ஸ்கேனர் கருவிகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 2020ம்  ஆண்டுக்குள் இவை அமைக்கப்பட உள்ளன. இந்த ஸ்கேனரில் ஆண், பெண் யாராக இருப்பினும் நிழல் உருவ படம் போல தெரியவரும். அந்த உருவத்தில் உடலில் ஏதாவது பொருட்கள் ஒளித்து  வைக்கப்பட்டு இருந்தால், மஞ்சள் நிறத்தில் ஒளிரும். இதனை வைத்து அவர்கள் முழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்தியாவில் 84 விமான நிலையங்களில் இந்த சோதனை முறை அமல்படுத்தப்பட உள்ளது. இவற்றில் 26 விமான நிலையங்கள் மிகவும்  பாதுகாப்பானவை மற்றும் 58 பாதுகாப்பான விமான நிலையங்களாகும்.  இந்த சோதனையின் போது காலணிகள், மேலாடை உள்ளிட்டவைற்றை  கழற்ற வேண்டிய அவசியம் இல்லை.  ஒரு பயணியை சோதனை செய்வதற்கு 8 விநாடிகள் மட்டுமே பிடிக்கும். ஒரு மணி நேரத்தில் 300  பயணிகளை சோதனை செய்ய முடியும். இந்த ஸ்கேனரில் கதிர்வீச்சு அபாயம் இல்லை. எனவே, கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைவரையும்  சோதனை செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறினர்..


Tags : airports , firs,airports, Full Body, Testing Tool
× RELATED 4 விமான நிலையங்களுக்கு மிரட்டல் சென்னை...