×

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை நெடுஞ்சாலைகளில் தமிழ் எண்களுடன் மைல் கல்: தென்மாவட்ட தொல்லியல் குழு கண்டறிந்தது

மதுரை: நெல்லை மாவட்டம் பிரம்மதேசம் அருகே கவுதமபுரியில் ஆங்கிலேயர் காலத்தைய தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல் கல்லை தென்மாவட்ட  தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் கண்டறிந்துள்ளனர்.நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையில் இடப்புறமாக கவுதமபுரி வண்டன்குளக்கரை இருக்கிறது. இங்கு  18ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண்களுடன் கூடிய மைல்கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் மணிகண்டன், ராஜகுரு ஆகியோர் கூறியதாவது:நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியின் முதல் தமிழ் எண் மைல் கல் இதுதான். முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிகாலத்தில் மிக  முக்கியமான தளமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் 1850ம் ஆண்டு வரை தாலுகா தலைமையிடமாகவும் இருந்த பிரம்மதேசம் வரலாற்றில் மிக  முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஆங்கிலேயர் ஆட்சியின் மிக முக்கியமான கட்டுமான கட்டமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 18ம் நூற்றாண்டின்  இறுதிக்கட்டத்தில் அம்பாசமுத்திரம் தொடங்கி பிரம்மதேசம் வரை இச்சாலையை அமைத்து முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை  இந்த மைல்கல் மூலம் அறிய முடிகிறது.

 கவுதமபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டில் அம்பாசமுத்திரம் ‘க’, பிரம்மதேசம் ‘க’ அதாவது கல்வெட்டு நடப்பட்டுள்ள  வண்டன்குளக்கரையிலிருந்து இரண்டு ஊர்களும் நேரெதிர் திசையில் 1 மைல்தூரம் என்று ஒரு பக்கத்தில் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.  அம்பாசமுத்திரம் மற்றும் பிரம்மதேசம் செல்பவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தவழியில் வேறு  எங்கும் சாலை ஓரத்தில் இதைப்போன்ற தமிழ் எண் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அடையாளம் காணப்படவில்லை.200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலையாக இருந்துள்ளதை இந்த மைல்கல் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.  பிரம்மதேசம் தாலுகா தலைமையகமாக இருந்த காலக்கட்டத்தில் அதாவது கிபி 1850க்கு முன்னதாக 18ம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில்  தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்ட போது, கிழக்கிந்திய கம்பெனியினரால் இந்த மைல் கல் நடப்பட்டிருக்க வேண்டும்.

 தற்போது நடைமுறையிலுள்ள அரபு எண்கள் பயன்படுத்தாமல் ரோமன் எண்களையும், தமிழ் எண்களையும் மட்டுமே பயன்படுத்தி இந்த மைல் கல்  பொறிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ரோமன் மற்றும் தமிழ் எண்கள் மட்டுமே  பயன்பாட்டில் உள்ளதற்கு மிக முக்கியமான சான்றாக இது இருக்கிறது. தமிழ் எண்கள் சமீபகாலமாகத்தான் புழக்கத்திலிருந்து அற்றுப்போயிருக்கிறது  என்பதையும் இது தெளிவாக்குகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Tags : Tamil ,British ,South , Created, British , Tamil numbers ,highway,
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...