×

குடியாத்தம் அருகே பரபரப்பு மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓவை தாக்கி டிராக்டரில் கடத்தல்: செல்போனை பறித்துக்கொண்டு கீழே தள்ளினர்

குடியாத்தம் : மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டரில் கடத்திச்சென்று, செல்போனை பறித்துக்கொண்டு கீழே தள்ளிய  சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வாத்தியார்பட்டி கிராம பாலாற்றில் டிராக்டர் மூலம் மணல் கடத்துவதாக  குடியாத்தம் தாசில்தார் சாந்திக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி அலங்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அனீஷ்குமார்(26)  வாத்தியார்பட்டி பாலாற்றில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் பாலாற்றில் உள்ள மணலை சலித்து டிராக்டரில் ஏற்றிக்  கொண்டிருந்தனர். அவர்கள் விஏஓவை பார்த்ததும் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக அனீஷ்குமார் உயரதிகாரிகளுக்கு  செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் அவர்கள் டிராக்டரில் வேகவேகமாக மணலை நிரப்பிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.  அவர்களை கிராம நிர்வாக அலுவலர் அனீஷ்குமார் தனது பைக்கில் அவர்களை விரட்டிச் சென்றார்.   

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் டிராக்டரை நிறுத்தி, அனீஷ்குமாரை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும்  அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டனர். அப்ேபாது அவர் சாலையில் சென்றவர்களை பார்த்து தன்னை காப்பாற்றுமாறு  சத்தமிட்டார். இதையடுத்து குடியாத்தம்- மாதனூர் நெடுஞ்சாலையில் டிராக்டரில் இருந்து விஏஓவை தள்ளி விட்டு மணல் கடத்தல் ஆசாமிகள் தப்பிச் சென்றனர்.  இதையடுத்து அங்கிருந்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்துக்கு வந்து அவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து நடத்திய  விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் அனீஷ்குமாரை கடத்தியது குடியாத்தம் அடுத்த வளத்தூர் ராசம்பட்டி கிராமத்தை சேர்ந்த  கார்த்தி என்பது  தெரிய வந்தது. டிராக்டருடன் தலைமறைவான கார்த்தி உட்பட மணல் கடத்தல் ஆசாமிகளை போலீசார்  தேடி வருகின்றனர்.

 இதுபற்றிய தகவல் குடியாத்தம் வருவாய்த்துறையினருக்கு வேகமாக பரவியது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் தாலுகா  அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்டிஓ ஆகியோருக்கு தகவல் தெரிவித்து பணியின்போது  பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Tags : VAO ,sand tunnel ,Gudiyatham , Gudiyatham,VAO,tractor,
× RELATED சாத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!