×

எட்டு வழிச்சாலைக்கு மேல்முறையீடு செய்வதா? தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்: செய்யாறு அருகே கொந்தளிப்பு

செய்யாறு: எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்ப்பை மேல் முறையீடு செய்த தமிழக அரசை கண்டித்து செய்யாறு அருகே சேத்துப்பட்டு அடுத்த  தச்சம்பாடி, முளகிரிப்பட்டு மற்றும்  எருமைவெட்டி கிராமத்தில் விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா முளகிரிப்பட்டு கிராமத்தில், தமிழக அரசு 8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு  செய்தது, வெறும் 7 சதவீதம் மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற பொய்யான தகவலை கண்டித்து விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் எருமைவெட்டி கிராமதேவன் தலைமையில் முளகிரிபட்டு மற்றும் எருமைவெட்டி  கிராமத்தில் விவசாய நிலத்தில் இறங்கி கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு இடங்களிலும் எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் தேத்துரை, நெடுங்கல், இளநீர்குன்றம், கீழ் கொளத்தூர், எருமைவெட்டி, அரசூர்,  பெரும்பாலை, தென் தண்டலம், சித்தாமூர், தென்மாவன்தல், முளகிரிப்பட்டு, செங்காடு, கோட்டகரம், மேல்நெமிலி, நம்பேடு, அரியப்பாடி, இஞ்சிமேடு,  அல்லியந்தல், தெள்ளாரம்பட்டு, மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களிலிருந்து விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி கரும்பு வயலில் இறங்கி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள்  எழுப்பினர். அதேபோல், சேத்துப்பட்டு - போளூர் சாலையில் உள்ள தச்சாம்பாடி கிராமத்தில் சென்னை - சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்  மற்றும் விவசாயிகள் சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் கூறியதாவது: தமிழக அரசில் இதுவரை இருந்த  முதல்வர்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டினார்கள்.

ஆனால், தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்  பாண்டியராஜன் விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து இந்த தேவையற்ற சாலையை கொண்டு வந்தே  தீருவோம் என ஆணவமாக பேசி விவசாயிகள் மனதை புண்படுத்துகின்றனர். மேலும், தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இந்த  எதிர்ப்பு இயக்கம் விவசாயிகளுடன் இணைந்து தொடர்ந்து போராடி தமிழக அளவில் மிகப்பெரிய எதிர்ப்பை கொண்டு வருவோம் என்றனர்.  போராட்டத்தில் தச்சாம்பாடி, ஆத்தூரை, கரிப்பூர், ராமாபுரம், அல்லியந்தல், தெள்ளாரம்பட்டு, ராந்தம், தொழுப்பேடு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து  ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சேலம் கிராமங்களில் இன்று உண்ணாவிரதம்
சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உருவாக்கிய உழவர் உற்பத்தியாளர் பேரியக்க  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரும் 3ம் தேதி  (இன்று), பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்தனர். அதன்படி இன்று காலை 10 மணிக்கு,  சேலம் பூலாவரி, உத்தமசோழபுரம், பருத்திக்காடு, ராமலிங்கபுரம், குப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்  நடத்துகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Tags : promotions Farmers ,state ,Tamil Nadu ,Kayar , Appeal ,eight promotions,state government, turmoil near Kodar
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு;...