×

நதிகளை இணைத்தால் இலவு காத்த கிளி நிலை வரவே வராது: விஸ்வநாதன், தமிழக ஏரிகள், ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர்

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் என்பது வரவேற்கத்தக்கது தான். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி ஆற்றில் இருந்து  வங்க கடலில் வீணாக கலக்கும் 1,100 டிஎம்சி தண்ணீரை உபயோகமான முறையில் பயன்படுத்த முடியும். இந்த திட்டம் நீண்டகால திட்டம் ஆகும்.  ₹60 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்த திட்டம் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அமைச்சர் பேசி வருகிறார். ஆனால், அந்த திட்டத்திற்கு நிதி தற்போது வரை ஓதுக்கீடு  செய்யப்படவில்லை. மேலும், இந்த திட்டம் குறித்து தற்போது வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யும் நிலையில் தான் உள்ளது. இப்படியே போனால்  இந்த திட்டத்தை செயல்படுத்த 10 ஆண்டுகள் ஆகி விடும்.மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்; அதற்கு வரும்  நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த திட்டம் விரைவில் நிறைவேறும் என்ற  நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்படும்.

காவிரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகம் பெரிய அளவில் பயன்பெறும். இந்த திட்டத்தின் மூலம் கடலில்  வீணாகும் நீரை திருப்பி விடுவதன் மூலம் ஏரிகள், அணைகளில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம். இதன் மூலம் குடிநீர், பாசனத்திற்கு தண்ணீர் குறித்த  காலத்தில் திறந்து விட முடியும். அதே நேரத்தில் கங்கை முதல் காவிரி வரை இணைக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக பேசி வருகின்றனர். இப்போது புதிதாக  கோதாவரி-காவிரியை இணைப்போம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதனால், இந்த திட்டத்தின் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தால் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படும். காவிரி நீரை நம்பி டெல்டா பாசன விவசாயிகள் விவசாயத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 சதவீதம் விவசாயம் நடைபெற்று வந்த  டெல்டா பகுதியில் தற்போது 70 சதவீதம் விவசாயம் நடக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் 8 லட்சம் ஏக்கர் பாசன பரப்பை தற்போது 28 லட்சம் ஏக்கராக  அதிகரித்து விட்டனர்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் கடைகோடியில் உள்ள காவிரிக்கு முழு நீர் வருமா என்ற சந்தேகம் உள்ளது. இதுபோன்ற சந்தேகத்தை  எல்லாம் மத்திய அரசு  தீர்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விவசாயிகளின் வாக்குகளை பெற இந்த உறுதி அளித்தாரா என்ற சந்தேகம் உள்ளது. அவர் உறுதி  அளித்தபடி இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாங்கள் கர்நாடகா திறந்து விடும் காவிரி நீரை நம்பித்தான் இருக்கிறோம். தற்போது காவிரி ஆணையம் ஒப்பந்தப்படி இந்த மாதம் 9.19 டிஎம்சி  தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாமல் இழுத்தடித்து வருகிறது. தென்னக  நதிகளை இணைக்கும் பட்சத்தில் இது போன்று தண்ணீருக்காக இலவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. எனவே தான்  கோதாவரி-காவிரி இணைப்பு  திட்டத்தை விவசாயிகளாகிய நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதை  உறுதி செய்ய வேண்டும்;  அதற்கு வரும் நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில்  இந்த  திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

Tags : rivers ,Vishwanathan ,Tamil Nadu ,river irrigation farmers union leader ,lakes , Connecting , Status, Vishwanathan, Tamilnadu Lakes, Chairman,the River Irrigation Farmers Association
× RELATED தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில்...