×

நாடாளுமன்றத்தில் முதலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்

தேசிய நீர் மேம்பாட்டு முகமை சார்பில் இரண்டு விதமான திட்டத்தை வகுத்துள்ளனர். ஒன்று இமாலய நதிகள் இணைப்பு, இரண்டாவது தென்னிந்திய  நதிகள் இணைப்பு என்று திட்டத்தை வகுத்துள்ளனர். இதில், தென்னிந்திய நதியான மகாநதியில் இருந்து  கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணையாறு-பாலாறு-வெள்ளாறு-காவிரி என்று தான் தேசிய நீர் மேம்பாட்டு முகமை கூறியது. இந்த திட்டத்தில் நான்கு  அணைகள் கட்டவும் அப்போது முடிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும் போது கூட கோதாவரியில் இருந்து இரும்பு பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வருவோம். என்று  கூறியுள்ளார். பைப்லைன் மூலம் நதிகள் இணைப்பது என்பது சாத்தியப்படுமா என சந்தேகம். 7 ஆயிரம் கன அடி தண்ணீர் கொண்டு வருவது போன்று  கால்வாய் அமைத்து, அந்த கால்வாயை இந்த நதிகளில் இணைத்து காவிரிக்கு வரும். அப்படி கொண்டு வரும் வழிகளில் உள்ள நதிகளும் பயன்  அடையும்.

இப்போது அவர்கள் சொல்வது குழாய் மூலம் என்றால், குழாய்  மூலம் எப்படி கொண்டு வர முடியும். உதாரணமாக, 20 ஆயிரம் கன அடி தண்ணீர்  கொண்டு வந்தால் 50 நாளைக்கு வந்தது என்றால் 86 டிஎம்சி தான் வந்து சேரும். அவர்கள் சொல்லும் 7ஆயிரம் கன அடி ஆண்டு முழுவதும் வந்தால்  கூட 140 டிஎம்சி தான் வரும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த கூட்டத்தில் பாசன செயலாளர் மங்கள கிஷான் என்பவர் மகாநதியில்  இருந்து அதிகளவில் வெளியேறும் உபரி நீரை திருப்புவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றனர். ஆனால், ஆந்திர நீர்வளத்துறை செயலாளர்  நீங்கள் எப்போதும் இப்படி தான் பேசி வருகிறீர்கள். கோதாவரியில் தண்ணீர் மிச்சம் எல்லாம் இல்லை என்று பேசினார். இப்படிபட்ட சூழ்நிலையில்  ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகம். இதில், ஒன்றே ஒன்று செய்தால் நதிகள் இணைப்பு சாத்தியம். எல்லா நதிகளும் மத்திய அரசுக்கு  சொந்தம் என்று பிரகடனப்படுத்தி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் ஒழிய இது சாத்தியப்படாது.

தமிழகத்திற்கு தண்ணீர் தருவது என்றால் எல்லா மாநிலங்களும் யோசிக்கத்தான் செய்கிறது. ஆந்திராவில் ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீர் ஆண்டுக்கு 12  டிஎம்சி தர வேண்டும். ஆனால், அவர்களிடம் நம்மால் அந்த தண்ணீரை நெருக்கி கேட்க முடியாது. காரணம், ஒப்பந்தத்தில் 12 டிஎம்சி வரை என்று  உள்ளது. எனவே தான் ஆந்திரா 1 டிம்சியோ, 2 டிஎம்சியோ தருவேன் என்று கூறுகிறார்கள். நம்மால் பதில் பேச முடியவில்லை. நமக்கு தண்ணீர்  கொடுக்கவே அவர்கள் அஞ்சுகிறார்கள். அண்டை மாநிலங்கள் அப்படி தான் இருக்கிறார்கள். தென்னக நதிகளை இணைப்பு திட்டத்தில் இன்னொன்று என்னவென்றால் பம்பா-அச்சன்  கோயிலில் மிகையாக ஓடுகிற நீரை ஒரு அணையை கட்டி திருப்பி மேற்கு தொடர்ச்சி மலையை குடைந்து கொண்டு வந்து வைப்பாறுடன்  இணைக்கலாம் என்று  மத்திய நீர்வள ஆணையம் முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் பல கூட்டங்கள் போட்டது. இந்த  கூட்டத்திற்கு தமிழக பிரதிநிதிகள் செல்வார்கள். ஆனால், கேரள அதிகாரிகள் வர மாட்டார்கள். இப்படியிருக்கிற சூழ்நிலையில், அப்படியொரு  எண்ணமும் ஆந்திராவிடம் உள்ளது. எனவே, இந்த திட்டம் எப்படி சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. எல்லா நதிகளும் மத்திய அரசுக்கு சொந்தம் என்று பிரகடனப்படுத்தி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் ஒழிய இது சாத்தியப்படாது.

Tags : Thirunavukarasu ,Parliament , Parliament, First resolution, Thirunavukara, retired public service engineer
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்