×

5 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைப்பதா?: ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னை: நந்தனம், தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 மெட்ரோ ரயில் நிலையங்களை நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைத்துள்ளதாக ஊழியர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் காலை, மாலை, இரவு ஆகிய 3 ஷிப்ட்களில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், தங்களுக்கு எதிரான நடவடிக்கையில்  நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதேபோல், கடந்த மாதம் போராட்டத்தையும் நடத்தினர். பல மெட்ரோ ரயில் நிலையங்களை நிர்வாகம் தனியார் வசப்படுத்த முயற்சி செய்கிறது.  அதை கைவிட வேண்டும் என்று ஊழியர்கள் தொடர் கோரிக்கையை வைத்து வந்தனர். இந்தநிலையில், நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை,  கீழ்ப்பாக்கம், பச்சையப்பா கல்லூரி ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களை தனியார் வசம் நிர்வாகம் ஒப்படைத்துள்ளதாக ஊழியர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது: கடந்த 1ம் தேதி முதல் நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், பச்சையப்பா கல்லூரி ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களை  நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைத்துவிட்டது. இந்த ரயில் நிலையங்களில் நிலைய கட்டுப்பாட்டாளர் என்ற பொறுப்பில் முறையான பயிற்சி பெற்ற  அரசு ஊழியர்கள் இருந்தனர். ஏற்கனவே, பல்வேறு பொறுப்புகளில் தனியார் ஊழியர்களை நிர்வாகம் நியமித்து வந்தது. இந்தநிலையில், 1ம் தேதி முதல் நிலைய கட்டுப்பாட்டாளர்களை இந்த இடங்களுக்கு பணியில் அமர்த்துவதை நிர்வாகம் தவிர்த்துள்ளது. அதற்கு  பதிலாக நிலைய பொறுப்பாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதற்கு என்று தனியாக ஆட்களை எடுத்து பணியில் அமர்த்தியுள்ளனர்.  மெட்ரோவில் 170 பேர் நிலைய கட்டுப்பாட்டாளர்களாக பணியாற்றி வருகிறோம்.

இவர்களை கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றும் முயற்சியை தற்போது நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும்  அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அரசு நிறுவனத்தை  முழுமையாக தனியார் வசப்படுத்தும் இந்த போக்கை ஊழியர்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நாங்கள் முறையாக டெல்லியில் பயிற்சி பெற்று முழு உடல் பரிசோதனை செய்து அதற்கென்று சான்றிதழ் பெற்று பணியாற்றி வருகிறோம். ஆனால்,  முறையான பயிற்சியும், சான்றிதழும் இல்லாதவர்களால் பணியாற்றுவது சிரமம். தற்போது 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து  பணிகளையும் தனியார் வசம் ஒப்படைத்தது போல் விரைவில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க நிர்வாகம்  திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

நாங்கள் முறையாக டெல்லியில் பயிற்சி பெற்று முழு உடல்பரிசோதனை செய்து அதற்கென்று சான்றிதழ் பெற்று பணியாற்றி வருகிறோம். ஆனால், முறையான பயிற்சியும், சான்றிதழும் இல்லாதவர்களால் பணியாற்றுவது சிரமம்.


Tags : Staff protesters ,Metro ,stations , 5 Metro stations , handed, private owners, Staff protesters
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...