அசாமில் குடிமக்கள் பதிவேடு பிரச்னை தீர்க்க வெளிநாட்டு மக்களுக்காக 1,000 தீர்ப்பாயம்: மத்திய அரசு உதவி

புதுடெல்லி: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியலில் இடம் பெறாத வெளிநாட்டினர் தங்கள் குறைகளை முறையிடுவதற்காக, அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் ஆயிரம் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த லட்சக்கணக்கான வெளிநாட்டினர், அசாம் மாநிலத்தில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே, அசாம் மக்களிடம் இருந்து இவர்களை வேறுபடுத்தி பார்க்கவும், நாட்டை விட்டு வெளியேற்றவும் இம்மாநிலத்தில் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ தயாரிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் இதன் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 40.7 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை என சர்ச்சை ஏற்பட்டது. இதில், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். இம்மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கும்படி 3.29 கோடி பேர் மனு செய்தனர். இவர்களில் 2.9 கோடி பேர் மட்டுமே வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் இறுதி பட்டியல் அடுத்த மாதம் 31ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், சட்ட விரோத குடியேறிகள் என அறிவிக்கப்படும் வெளிநாட்டினரின்  பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, மாநிலம் முழுவதும் தற்போது 100 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதை ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் உட்பட 12 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் பி.ஆர்.சர்மாவுடன், அசாம் அரசு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. மின்னணு முறையில் தீர்வு காண, இ-தீர்ப்பாயங்கள் அமைக்கலாம் எனவும் அசாம் அரசு ஆலோசனை கூறியுள்ளது. மேலும், அடுத்த மாதம் 31ம் தேதிக்குள், அனைத்து வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களையும் அமைக்க, அசாம் அரசுக்கு உதவி செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : Tribunals ,Assam , Citizens in Assam, Record problem, Tribunal
× RELATED ராஜபாளையம் அருகே நிலத்தகராறில்...