×

காஷ்மீரில் கடந்த 5 மாதத்தில் 101 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை 50 இளைஞர்கள் புதிதாக சேர்ப்பு: பாதுகாப்பு படை கவலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 5 மாதத்தில் 101 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், புதிதாக 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்திருப்பதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் இந்த ஆண்டில் கடந்த 31ம் தேதி வரை, 101 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றுள்ளது. இதில் 23 பேர் வெளிநாட்டினர், 78 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். தீவிரவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படை கடும் முயற்சிகள் மேற்கொண்டாலும், தீவிரவாத அமைப்பில் சேரும் உள்ளூர் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது கவலை அளிப்பதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பல்வேறு தீவிரவாத அமைப்புகளில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.

தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி முஸா கொல்லப்பட்ட பிறகும் கூட ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் திடீர் எழுச்சி பெற்றுள்ளன. எனவே, தீவிரவாதத்துக்கு எதிரான போராட்ட உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளுடனான சங்கிலி தொடர்பை துண்டிப்பதுடன், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெற்றோருக்கு தீவிரவாத பயங்கரம் குறித்து கற்பிக்க வேண்டும்.  மேலும், எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலும் அதிகரித்துள்ளது. ஜம்முவில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இம்மாத இறுதியில் அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதால், பாதுகாப்பை உறுதிப்படுத்த, தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க வேண்டும்.

2014க்கு பிறகு அதிகம்:
காஷ்மீரில் ஆயுதம் ஏந்தும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த 2010-13ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2014க்குப் பிறகு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2010-13 வரை முறையே 54, 23, 21, 6 பேர் தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்த நிலையில், 2014ல் இந்த எண்ணிக்கை 53 ஆகவும், 2015ல் 66, 2016ல் 88 ஆகவும் அதிகரித்தது. தற்போது, இந்த ஆண்டின் முதல் 5 மாதத்தில் மட்டுமே 50க்கும் மேற்பட்டோர் தீவிரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர்.

காரணம் என்ன?
கடந்த ஆண்டு பிப்ரவரி 14ல் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையேயான துப்பாக்கி சண்டை நடக்கும் இடங்களில் உள்ளூர் மக்களின் கல்வீச்சு, போராட்டங்கள் நடப்பதாகவும், அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்குகளில் திரளாக மக்கள் பங்கேற்பதாகவும் அதிகாரிகள் கருதுகின்றனர். இதுபோன்ற சூழலே இளைஞர்களை உணர்ச்சிப்பூர்வமாக தூண்டி தீவிரவாத அமைப்பில் சேர வைப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : terrorists ,security guard , In Kashmir, terrorists, shot dead, security force, worry
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...