×

அரசியல்வாதிகள்- அதிகாரிகள் கூட்டுச்சதியால் காஞ்சிபுரத்தில் காணாமல் போன ஏரிகள்

* ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் குடிநீருக்கு திண்டாட்டம்
* ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
* பொதுமக்கள் கோரிக்கை* ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
* பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: சென்னைக்கு அருகில் உள்ள ஏரிகள் மாவட்டமான காஞ்சிபுரத்தில் உள்ள சிறியதும் பெரியதுமான ஆயிரக்கணக்கான ஏரிகள் பராமரிப்பு இல்லாததாலும், மண் திருட்டாலும், பருவமழை பொய்த்ததாலும் குடிநீர் உள்பட அனைத்துக்கும் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகளின் மாவட்டம் என்றும், தஞ்சை டெல்டா  மாவட்டத்துக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் என்றும் சிறப்புப் பெற்றது. அத்தகைய சிறப்பு பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியதும், சிறியதுமாக 1942 ஏரிகள் உள்ளன.  

இவற்றில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 912 ஏரிகளும்,  ஒன்றிய ஊராட்சிகளின் பராமரிப்பில், 1103 ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் ஆறுகள் இல்லாத மாவட்டம் காஞ்சிபுரம் என்பதால் பலநூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டவை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றை ஒட்டியப் பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஏரி பாசனமே நடைபெறுகின்றன. தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கநல்லூர், திருப்போரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற விரிவாக்கத்தின் காரணமாக ஏரிகள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சில ஏரிகளை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் புரிந்துணர்வுடன் கூட்டு சேர்ந்து விற்றுவிட்டனர். இதனால், நூற்றுக்கணக்கான ஏரிகள் மாயமாகிவிட்டன.

மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் தோன்றுவதும் வாடிக்கையாக உள்ளது. பல ஏரிகள் இன்னமும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. அதில் விவசாயம், வீடுகள், சூளைகள், தோட்டப் பயிர்கள் என்ற ஏரி இருந்ததையே காணாமல் போகச் செய்துவிட்டனர். அதுமட்டுமல்லாது, கடந்த பத்து ஆண்டுகளில், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் வட்டங்களில் உள்ள முக்கிய பாசன ஏரிகள் நகர  விரிவாக்கத்தின் காரணமாக குப்பைத் தொட்டிகளாகவும், கழிவுநீர் சேகரிப்பு நிலையங்களாகவும் மாறி உள்ளது.

அதிகாரி-அரசியல்வாதி கூட்டு: ஆதனஞ்சேரி ஏரி, செம்பாக்கம் ஏரி, மேடவாக்கம் ஏரி, முடிச்சூர் ஏரி, ஆதனூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, மேலக்கழினிதாங்கல், ஒரகடம் பெரிய ஏரி, அகரம் தென் ஏரி, வண்டலூர் ஏரி, தாம்பரம் சின்ன ஏரி, பெரிய ஏரி, வேளச்சேரி ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, சிட்லபாக்கம் ஏரி,  நன்மங்கலம் ஏரி ஆகியவை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. அரசியல் குறுக்கீடு அதிகாரிகளின் ஆதரவு உள்ளது என்ற ஒரு காரணத்தை திரும்ப திரும்பக் கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பது, அதிகாரிகளுக்கு வாடிக்கையாகி விட்டது.

நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களுக்கு குழாய் இணைப்பு, ரேஷன் அட்டை, வாக்காளர் பட்டியலில் இடம் என்று அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன்  நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏரியை ஆக்கிரமிக்கும் விஷயத்தில், பொதுப்பணி மற்றும் வருவாய் துறையின் கீழ் மட்ட அதிகாரிகளும் பின்னணியில் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நாமும், வருங்கால சந்ததியும் உயிர்வாழ குடிநீர் அவசியம் என்பதை உணர்ந்து இனியொரு விதி செய்வோம். ஏரிகளைக் காப்போம். இதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட  அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எஞ்சியுள்ள நீர் ஆதாரங்களையாவது பாதுகாக்க முடியும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பாசனத்துக்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஏரிகள் அனைத்தும் வறட்சியின் பிடியில் சிக்கி வறண்டு காணப்படுகின்றன. இதனால் மிக முக்கியமான குடிநீர் மற்றும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திட்டமிடல் இல்லாத இந்த அரசின் அலட்சியத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாடி வருகின்றனர். பொதுமக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது அரசு?. நாமும், வருங்கால சந்ததியும் உயிர்வாழ குடிநீர் அவசியம் என்பதை உணர்ந்து இனியொரு விதி செய்வோம். ஏரிகளைக் காப்போம்.

Tags : politicians ,losers ,Kanchipuram , Politicians - officers, joint ventures, in Kanchipuram, disappeared, lakes
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்