தலைமை தேர்தல் ஆணையம் தகவல் நவ.15 - டிச.7ம் தேதிக்குள் இலங்கை அதிபர் தேர்தல்: சிறிசேனா, ரணில் தனித்து போட்டி

கொழும்பு: ‘இலங்கையில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7ம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும்’ என அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் மகிந்தா தேசபிரியா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக களமிறங்கிய மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். வரும் டிசம்பர் 7ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படலாம் என சிறிசேனா ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், கொழும்பில் நேற்று நடந்த வாக்காளர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் மகிந்தா தேசபிரியா பேசுகையில், ‘‘தற்போதைய அதிபரின் பதவிக்காலம் முடிய ஒருமாதத்திற்கு முன்பாக தேர்தலை நடத்த வேண்டும். அந்த வகையில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7க்குள் தேர்தல் நடத்தப்படும். இதில் சீக்கிரமாக என்றால், நவம்பர் 15 தேதியும், தாமதமாக என்றால் டிசம்பர் 7ம் தேதியுமாக தேர்தல் நடத்தப்படலாம். ஆனாலும், இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்,’’ என்றார்.

கடந்த முறை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனே சிறிசேனா வெற்றி பெற்றார். தற்போது அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் சிறிசேனாவுக்கு கருத்து வேறுபாடு முற்றியுள்ளது. அதே போல், கடந்த ஏப்ரலில் இலங்கையில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 258 பேர் பலியாயினர். இதனால், சிறிசேனாவின் தலைமை கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. எனவே, 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என சிறிசேனா கூறி உள்ளார். ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய மக்கள் கட்சி தனி வேட்பாளரை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது.


Tags : Elections ,Sri Lanka ,Sirisena ,Ranil , Chief Election Commission, Information November 15 - December 7, Sri Lanka, Presidential Election
× RELATED ரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்