வெற்றியை தொடர இங்கிலாந்து முனைப்பு: பாகிஸ்தானுக்கு நெருக்கடி

நாட்டிங்காம்: ஐசிசி உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் உலக கோப்பை தொடரில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதுடன் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகவும் விளங்குகிறது. தென் ஆப்ரிக்காவுடன் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 104 ரன் வித்தியாசத்தில் வென்றது, அந்த அணியின் பலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது.

இங்கிலாந்து அணி அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடக்க உள்ள இப்போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்குகிறது. இந்த மைதானத்தில் 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்னும், 2018ல் நடந்த போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்னும் குவித்துள்ளதால், இங்கிலாந்து வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ், பட்லர் என்று அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால், இன்றைய ஆட்டத்திலும் 400+ ரன் அடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பவுன்சர் பந்துவீச்சுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதால், மார்க் வுட் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. இங்கிலாந்து அணி மிகுந்த உத்வேகத்துடன் உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக படுதோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய 12 ஒருநாள் போட்டியில் 11 தோல்விகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இங்கிலாந்துடன் நடந்த இருதரப்பு தொடரிலும் 0-4 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியுள்ளது. வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆட்டத்தில் வெறும் 105 ரன்னுக்கு சுருண்டதால், இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இமாம் உல் ஹக், பாபர் ஆஸம், சோயிப் மாலிக், ஹபீஸ், சர்பராஸ் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு சவால் விடுக்க முடியும். வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் நல்ல பார்மில் இருக்கிறார். வகாப் ரியாஸ் உள்ளிட்ட சக பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுவது அவசியம். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்தும், முதல் வெற்றியை முத்தமிட பாகிஸ்தானும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), லயம் டாவ்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், மார்க் வுட், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், லயம் பிளங்க்கெட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ். பாகிஸ்தான்: சர்பராஸ் அகமது (கேப்டன்/கீப்பர்), பாபர் ஆஸம், ஹரிஸ் சோகைல், இமத் வாசிம், முகமது ஆமிர், முகமது ஹஸ்னைன், ஷாகீன் அப்ரிடி, வகாப் ரியாஸ், ஆசிப் அலி, பகார் ஸமான், ஹஸன் அலி, இமாம் உல் ஹக், முகமது ஹபீஸ், ஷதாப் கான், சோயிப் மாலிக்.

Tags : UK ,crisis ,Pakistan , Win, continue , England, initiate
× RELATED நேரில் சென்று பார்த்தால் தங்கள்...