×

பள்ளிக்கரணை சுற்றுப் பகுதிகளில் நள்ளிரவில் மின்வெட்டு: தூக்கம் இழந்து தவிக்கும் மக்கள்

வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 189, 190வது வார்டுக்குட்பட்ட பள்ளிக்கரணையில், துலுக்காணத்தம்மன் கோயில் தெரு மற்றும் அதில் அடங்கிய 1 முதல் 19 தெருக்கள், பெரியார் நகர், ஆதி சாமி நகர், காமகோடி நகர், ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேளச்சேரி, பெரும்பாக்கம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் இரவு நேரத்தில் 11 மணிக்கு மேல் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. சில நேரம் 5 மணி நேரம் வரை கூட தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் தற்போதுள்ள கோடை வெயிலுக்கு காற்றோட்டம் இல்லாமல் மக்கள் புழுக்கத்தில் தூக்கத்தை தொலைத்து அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால் பலர் இரவு நேரத்தில் மொட்டை மாடி மற்றும் தெருவில் படுத்து தூங்கும் நிலை உள்ளது. வெளியில் படுத்தால் கொசு கடிக்கு ஆளாவதோடு, தூக்கம் இல்லாமல் மறுநாள் காலையில் அலுவலகம் செல்பவர்கள் உடல் சோர்வு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதிகளில் சமீப காலமாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், தூக்கம் இழந்து தவிக்கிறோம். புழுக்கம் காரணமாக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினால், திருடர்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் மழுப்பலான பதிலளிக்கின்றனர். மின்வெட்டிற்கு உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : circuit areas , School, circuit, midnight, power cut
× RELATED தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில்...