நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாலை நேர சிறப்பு சிகிச்சை: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு சிகிச்சை பெற பாலி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார  நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், 3 அவசர கால மகப்பேறு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் பெற மாலை நேரங்களில் பாலி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளன.

இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலன், குழந்தை நலன், எலும்பு சார்ந்த பிரச்னைகள், பிசியோதெரபி, பல் மருத்துவம், கண், தோல், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்த பாலி கிளினிக் திங்கள் முதல் சனி வரை மாலை 4.30 முதல் 8.30 மணி வரை செயல்படும். நாள் ஒன்றுக்கு இரண்டு சிறப்பு மருத்துவ சேவைகளும் சனிக்கிழமை ஒரு சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் சிறப்பு மருத்துவ சேவைகளை பெற்று பொதுமக்கள் பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

× RELATED தனக்கு அளிக்கப்படும் சிகிச்சையை...