×

8 மாதங்களுக்கு முன் வழி தவறிய மும்பை பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு வழிதவறி வந்த பெண்ணை 8 மாதங்கள் கழித்து அவரது பெற்றோரிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைந்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி, மேகனா (25) என்ற பெண் அங்குமிங்கும் சுற்றித் திரிந்தார். அவரிடம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், மேகனாவுக்கு தனது முகவரி ஞாபகம் இல்லாத காரணத்தால், அவரை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடிவில்லை. இதனால், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காப்பகத்தில் அவரை சேர்த்தனர். பின்னர், அவரின் கைரேகை மூலம் ஆதார் எண்ணை கண்டுபிடித்து அவரின் முகவரியை கண்டறியும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், கடந்த 8 மாதங்களாக அவர் காப்பகத்தில் தங்கி இருந்தார். இதற்கிடையில் திடீரென ஒருநாள் அவர் தனது பெற்றோரின் முகவரியை காப்பக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதன்பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தமிழ் பேசிக்கொண்டு மும்பை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது, அங்கிருந்தவர்கள் சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டது தெரியவந்தது. இதன்பிறகு மும்பையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் மேகனாவின் பெற்றோரை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த வாரம் சென்னை வந்த அவர்கள் மேகனாவை மும்பைக்கு அழைத்து சென்றனர். தமிழகத்தை பூர்வீமாக கொண்ட மேகனாவின் தந்தை ராஜமாணிக்கம் மும்பையில் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Mumbai , 8 months before, way out, girl of Mumbai, delivery
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...