×

எண்ணூர் ஜெ.ஜெ நகர் அருகே ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் தாமரைக்குளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவொற்றியூர்: எண்ணூர் தாமரைக்குளத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் தூர்ந்து, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளதுடன், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி குறுகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எண்ணூர் ஜெ.ஜெ நகர் அருகே, சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் தாமரை குளம் அமைந்துள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் சுற்றுப் பகுதிகளான காமராஜ் நகர், திருவள்ளுவர் நகர், உலகநாதபுரம்,  சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், தூர்ந்து காணப்படுவதுடன், மழைக்காலத்தில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது, அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பை மற்றும் கழிவுநீரை இந்த குளத்தில் விடுவதால் கழிவுநீர் குட்டையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எண்ணூர் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த தாமரை குளத்தை அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. இதனால் குளம் தூர்ந்து, மழைக் காலத்தில் சுற்றுப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வருகின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதே நிலை நீடித்தால் தாமரை குளம் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : occupants ,Energoers ,JJ Nagar ,Lotamikulam , Ennore J.J. Nagar, occupiers Batti, Lotus, unidentified officers
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி