×

தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து சென்னை கடற்கரை ரயிலை கவிழ்க்க சதி?

சென்னை: சென்னை கோட்டை, பூங்கா ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து மின்சார ரயிலை கவிழ்க்க நடந்துள்ள சதி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி, தாம்பரம் மார்க்கமாக ஏராளமான மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். நேற்றுமாலை சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி ஒரு மின்சார ரயில் சென்றது. அப்போது கோட்டை- பூங்காநகர் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் கிடந்தது. இதை பார்த்ததும் ரயில் ஓட்டுனர் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் சுதாரித்துகொண்ட அவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதன்பிறகு ரயிலில் இருந்து இறங்கிவந்து தண்டவாளத்தில் கிடந்த கல்லை ஓரமாக போட்டுவிட்டு அங்கிருந்து  மறுபடியும் வேளச்சேரி நோக்கி ரயிலை ஓட்டிச்சென்றார். இதுபற்றி ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து எழும்பூர் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து  எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ‘’ போதை ஆசாமிகள் பாறாங்கல்லை கொண்டு வந்து போட்டார்களா, ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளதா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டை அருகே சிமென்ட் கல் வைத்து  முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. தற்போது சென்னையில் இதுபோன்று நடந்துள்ளது. ‘’ இந்த விஷயத்தில் ரயில்வே போலீசார் அலட்சியமாக இல்லாமல் துரிதமாக  செயல்பட வேண்டும்’’ என்று பயணிகள் கூறுகின்றனர்.



Tags : coastline ,Chennai , Railway, borangal, Chennai Beach Railway
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...