×

அரிமளம் அருகே கடும் வறட்சி தூர்ந்து போகும் குளங்களால் சாகுபடி பாதிப்பு

திருமயம்: அரிமளம் அருகே தாஞ்சூரில் கடும் வறட்சியால் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பின்றி தூர்ந்து போகும் வராலாற்று சிறப்புமிக்க குளங்களை தூர்வார வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே தாஞ்சூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றி வயல்கள், கண்மாய் சூழ்ந்து இருப்பதால் பசுமையாக காணப்படும். அரிமளம் ,சுற்று வட்டார கிராமங்களிலேயே ஆண்டுதோறும் விவசாயம் நடைபெறும் முக்கிய கிராமங்களில் தாஞ்சூரும் ஒன்று.  தாஞ்சூரில்  தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிட கூடாது என முன்னோர்கள் கிராமத்தை சுற்றி 10க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை ஏற்படுத்தி பராமரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீர் நிலைகள் வறண்டு பசுமையான கிராமமாக இருந்த தாஞ்சூர் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது.  சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டள்ளது. போதிய மழை இல்லாதது மட்டுமின்றி,  பாரம்பரியம் மிக்க நீர்நிலைகள், வரத்துவாரிகளை அதிகாரிகள் பராமரிக்காததே வறட்சிக்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாற்றுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘தாஞ்சூர் கிராமத்தில் விவசாயம், பால் உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. குறிப்பாக பால் உற்பத்தியில் மாவட்ட அளவில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் இந்நிலையில் தொடர் வறட்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கால்நடைகள் வளர்ப்பதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கவேண்டி உள்ளது.

 தாஞ்சூர் பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். கால்நடைகளை ராமரிக்க முடியாமல்  விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் பகுதியில் 10க்கும் மேற்பட்டநீர்நிலைகள் இருந்தாலும் மக்கள் அதிகம் பயன்படுத்தும்  வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயில் அருகே உள்ள திருகுளம், கருமுண்டுகுளம் மிகமுக்கியமானதாகும்.  தற்போது குளங்களும் கழிவுநீர், புதர் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளங்களை பராமரித்து வறட்சியிலிருந்து தாஞ்சூரை மீட்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : drought ,end , Arrimam, severe drought, ponds and cultivation
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...