×

ஆப்கானிஸ்தானை எளிதாக வென்றது ஆஸி.

பிரிஸ்டல்: உலக கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 38.2 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக நஜிபுல்லா 51 ரன் எடுத்தார். ரகமத் ஷா 43, கேப்டன் குல்பாதின் 31 ரன் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய ரஷித்கான் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 27 ரன் (11 பந்து) எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸம்பா தலா 3 விக்கெட், ஸ்டாய்னிஸ் 2, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 50 ஓவரில் 208 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. பிஞ்ச், வார்னர் ஜோடி அபார துவக்கத்தை தந்தது. பிஞ்ச் 40 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த நிலையில், பிஞ்ச் (66 ரன், 49 பந்து) ஆட்டமிழந்தார். கவாஜா (15) ரஷித்கான் சுழலிலும், கடைசி கட்டத்தில் ஸ்மித் (18) முஜீப் பந்திலும் வெளியேறினர். ஒருமுனையில் வார்னர் நங்கூரமிட்டு பொறுமையாக ஆடி அரைசதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வார்னர் 89 ரன் (114 பந்து), மேக்ஸ்வெல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags : Aussie ,Afghanistan , Afghanistan, easy, won, aussie.
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...