×

அமமுக ஆலோசனை கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் ‘சைலன்ட்’

* கட்சியில் இருக்க கட்டாயமில்லை
* டிடிவி.தினகரன் பேட்டி

சென்னை: கட்சியில் இருந்து ஒருசிலர் போவதை பெரியதாக எடுத்துகொள்ள மாட்டேன். யாரும் அமமுகவில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சந்தித்த படுதோல்வியையடுத்து கடந்த மாதம் 28ம் தேதி சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், தேர்தல் தோல்வி, உள்ளாட்சி தேர்தலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து வேட்பாளர்கள் தினகரனிடம் நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். குறிப்பாக, கட்சி கொடுத்த பணத்தை நிர்வாகிகள் முறையாக செலவு செய்யவில்லை. நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. பரிசு பெட்டகம் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. எனவே, குக்கர் சின்னத்தை பெற மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இனி வரும் தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட தலைமை முடிவு செய்ய வேண்டும் எனவும் தினகரனிடம் முக்கிய வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அமமுகவில் முக்கிய நபராக உள்ளார். அனைத்து வேட்பாளர்களும், நிர்வாகிகளும் தங்கள் தொகுதியில் நடைபெற்ற பிரச்னைகள் குறித்து தினகரனிடம் புகார் தெரிவித்த போதும் தங்க தமிழ்செல்வன் மட்டும் ஆலோசனை கூட்டத்தில் அமைதியாக இருந்துவிட்டாராம். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட தினகரன் உடன் வந்து நிற்பதை தவிர்த்துவிட்டு கிளம்பிசென்றதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வேலூர் மக்களவை தேர்தல், நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம். இந்த தேர்தலில் பெரிய வெற்றியை எதிர்பார்த்தோம். ஆனால், கிடைக்கவில்லை. தேர்தல் முடிவு எங்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். நாங்குநேரி வேட்பாளரை இன்னும் தேர்வு செய்யவில்லை. மத்திய அரசு இந்தி மொழியை கட்டாயமாக திணித்தால் அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதேபோல், எட்டுவழிச்சாலை திட்டத்தையும் மக்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 58 வேட்பாளர்களும் கலந்துகொண்டனர். எங்கள் உடன் இருப்பவர்கள் ஆட்சி, அதிகாரத்தை தாண்டி உடன் இருக்கிறார்கள். கட்சியில் இருந்து ஒருசிலர் போகலாம். யாரோ ஒருசிலர் கட்சியில் இருந்து போவதை பெரியதாக எடுத்துகொள்ளமாட்டேன். அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று இல்லை. அதேபோல், யாரையும் கட்டுப்படுத்தி கட்சியில் இருக்க சொல்லவில்லை. நான் சசிகலாவை சந்தித்த போது, தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இனி வரும் தேர்தல்களில் வெற்றிபெற அனைவரும் மனம் தளராமல் பணியாற்ற வேண்டும் என்றார்.இவ்வாறு கூறினார்.


Tags : Thamilselvan , Emotional advice, gold thamilselvan, 'silent'
× RELATED 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற...