×

தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை கொண்டு வந்து விடலாம் என்று பாஜ அரசு கனவிலும் நினைக்கக் கூடாது: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று மத்திய பாஜக அரசு தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க  எத்தனிக்க கூடாது” என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: “இந்தி உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்” என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான “புதிய கல்விக் கொள்கை” வகுக்கும் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை தமிழர்கள்  கிளர்ந்து எழுந்து நடத்தி-பலர் இன்னுயிர் இழந்து-இளைஞர்களின் உயிர்த் தியாகத்தின் விளைவாக, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைத் தீர்மானம் திமுக ஆட்சி அமைந்ததும்- முதலமைச்சர் அண்ணாவால் 23.1.1968 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இன்று வரை அந்த இரு மொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் சிங்க நடைபோட்டு வருகிறது.

“இந்தியாவில் உள்ள மொழிகளில் எது தகுதி உள்ள மொழி என்றால், அது “தமிழ்” “தமிழ்” என்று சொல்லத் தயக்கப்படமாட்டேன்” என்று சட்டமன்றத்தில் அண்ணா முழங்கியது இன்றைக்கும் இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. மாயூரம் சாரங்கபாணி, கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யன்பாளையம் வீரப்பன், கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம், கோவை பீளமேடு தண்டபாணி என்று மொழிக்காக தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட எண்ணற்ற இளைஞர்களின் நினைவாக - ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25ம் தேதியன்று அந்த மொழிப்போர் தியாகிகளுக்கு கழகம் வீரவணக்கம் செலுத்தி வருவதை மத்தியில் உள்ள பாஜக அரசோ அல்லது அந்த அரசு அமைத்த இந்தக் குழுவோ மறந்து விட்டதா? அல்லது தமிழ்நாட்டில் உள்ள தமது பினாமி அதிமுக அரசை மிரட்டி, முதலமைச்சரின் கையை முறுக்கி-இந்தத் திட்டத்தையும் நிறைவேற்றி விடுவோம் என்று கனவு காண்கிறதா? மொழி உணர்வு தமிழர்களின் ரத்தத்தில் இரண்டறக் கலந்தது.

அந்த ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை திமுக ஒரு போதும் சகித்துக் கொள்ளாது-கடுமையாக எதிர்த்துப் போர்தொடுக்கும். தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டுமொரு மொழிப் போராட்டத்திற்கு மத்திய பாஜக அரசு வழி அமைத்து விடாது என்றே இன்னும் நம்புகிறேன். அன்னைத் தமிழின் பெருமையைச் சீர்குலைக்கும் எவ்வித பரிந்துரைகளையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. ஆகவே புதிய வரைவுக் கல்வி கொள்கை - 2019ன் நோக்கம் கல்வியின் தரத்தை உயர்த்துவது என்று நினைப்பதற்குப் பதில்-இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கவும், சமஸ்கிருதத்தை வம்படியாகப் பள்ளிகளில் புகுத்தி இளைஞர்களின் மனங்களைப் பாழ்படுத்தவும்  திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இரு மொழிக் கொள்கை தீர்மானத்தின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று “இனி பள்ளிகளில் இந்தி வேண்டாம்” என்று 50 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது இன்னும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருக்கிறது. தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட “தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்” என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொழி பற்றிப் பரிந்துரை செய்யும் முன்பு இது போன்ற வரலாறுகளை இந்தக்குழு ஆராய்ந்ததாகவோ, அவற்றின் அடிப்படை நோக்கங்களைப் புரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள மாநில மொழிகளின் வரலாறு தெரியாமலேயே-இந்தி மொழி, சமஸ்கிருதம் போன்ற இரு மொழிகளை மட்டும் கட்டாயமாகத் திணித்து-ஒரு மும்மொழித்திட்டத்தை தமிழ்நாட்டிலும், இந்தி பேசாத மாநிலங்களிலும் புகுத்தி, அதன் மூலம் நாட்டைப் பேதப்படுத்தவும் இந்தக் குழு பரிந்துரையைச் செய்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் கேடுகெட்ட செயலாகும்.

ஆகவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழித்திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரையை மத்திய பாஜக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியதுமே தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவித்து- இந்தக் கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்துவார்கள். பாஜக அரசின் மதரீதியான-மொழி ரீதியான கலாசார மேலாதிக்க  “அஜெண்டாக்களுக்கு” எல்லாம் அடங்கி ஒடுங்கி ஆதரவு கரம் நீட்டும் அதிமுக அரசு இதற்கும் “ஆமாம் சாமி” போடாமல்-, இப்போதே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

வெளிப்படையாக எதிர்ப்பு காட்டி தடுத்து நிறுத்தும் தைரியம் இல்லையென்றால், கட்சியின் பெயரில் உள்ள “அண்ணா, திராவிட” என்ற இரு சொற்களையும் நீக்கிவிடவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல் வீசி- தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று மத்தியில் உள்ள பாஜக அரசு - தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க எத்தணிக்கக் கூடாது. அப்படிப்பட்ட பேராசைக்கனவும் அதற்காகப் பிழையான காரியமும் அவர்களுக்குப் பேரிடரை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Bhajan ,Tamil Nadu ,MK Stalin , In Tamilnadu, the trilingual project, the state government, MK Stalin, is alert
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...