×

மத்திய அமைச்சரவையில் இடம் கேட்க பாஜவிடம் அதிமுக அஞ்சுகிறது: டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: பாஜவிடம் தமிழகத்திற்கான மத்திய அமைச்சரவை இடத்தை கேட்டு வலியுறுத்த அ.தி.மு.க அஞ்சுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் கூறினார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் மைய மண்டபத்தில் அக்கட்சியின் புதிய எம்பிக்களின் கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தை சார்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் எட்டு பேரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தனர்.

இதையடுத்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் எம்பிக்களுடன் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வாகியுள்ள சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அவர்களும் வெற்றிப் பெற்ற தமிழக காங்கிரஸ் எம்பிக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் ராகுல் காந்திதான் தொடர்ந்து கட்சியின் தலைவராக அங்கம் வகிக்க வேண்டும் என்பதே சந்திப்பின் கோரிக்கையாக இருந்தது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் அவரிடம் தெரிவித்தோம். மேலும் மதவாத சக்திகளுக்கு எதிரான ஒரு தலைமை என்றால் அது ராகுல் காந்தி மட்டும்தான் என்று குறிப்பிட்டோம். இதையடுத்து அவர் எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவையை பொறுத்தமட்டில் தமிழகத்திற்கு ஒரு இடம் கூட இல்லை என்பதை ஏற்க முடியாது. இதில் அ.தி.மு.க.விற்கு இல்லை என்றாலும் கூட மாநில பாஜவை சார்ந்த ஒருத்தருக்காவது கொடுத்து இருக்கலாம். இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு அதிகம் முன்னுரிமை மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட்டது என்பதை கண்டிப்பாக யாராலும் மறுக்க முடியாது. ஆனால் பாஜ கட்சியானது 100 சதவீதம் ஒரு மாநிலத்தை அதாவது தமிழகத்தை தனித்து விட்டுள்ளது. இது வரலாற்று பிழை மற்றும் இழப்பாக அமையும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் மத்திய அமைச்சரவையில் பதவி வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும்.

ஆனால் பாஜவிடம் வலியுறுத்த அவர்கள் அஞ்சுகிறார்கள். ஏனெனில், அக்கட்சியில் ஒருமித்த கருத்து இல்லாமல் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளதே காரணமாகும். இதில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு மத்திய அமைச்சராக பதவி கொடுத்து இருந்தாலும் அவர்கள் இதுவரை நாங்கள் தமிழன் என்று ஒருமுறை கூட சொல்லியது கிடையாது. மேலும் தமிழகத்தின் முக்கிய பிரச்னையாக இருக்கும் நீட் தேர்வு, மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் என எதற்காகவும் உதவி செய்தது கிடையாது. இதைத்தவிர மத்திய அரசின் மும்மொழி கொள்கை என்பது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்றாகும். இதனை ஏற்கவே முடியாது. மேலும் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை படிக்க அதிகம் ஆர்வம் காட்டப்படவில்லை. தாய்மொழி தான் முக்கியத்துவமாக உள்ளது. அதனால் இந்தி திணிப்பு என்பது கண்டிப்பாக கூடாது. இவ்வாறு அழகிரி கூறினார்.

Tags : AIADMK ,Bhajan ,interview ,Union Cabinet ,Delhi ,KS Azhagiri , Central Cabinet, Place, Bhaj, AIADMK, fear
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...