×

8 வழிச்சாலை உள்ளிட்ட விவசாயத்தை அழிக்கும் திட்டங்களால் தமிழகத்தை சோமாலியாவாக மாற்ற முயற்சி: போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆவேசம்

சேலம்: 8 வழிச்சாலை உள்ளிட்ட விவசாயத்தை அழிக்கும் திட்டங்களால் தமிழகத்தை சோமாலியா நாடு போல் மாற்ற முயற்சிக்கிறார்கள் என சேலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கூறினர். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக, விவசாயிகள் ஒன்று திரண்டு உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம் நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று, சேலம் நாழிக்கல்பட்டியில் திரண்டனர். அங்கு, விளைநிலத்தில் கருப்பு கொடி ஏந்தி, 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர், ஆலோசனை கூட்டம் நடத்தினர். தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.

அதில், சேலம்-சென்னை 8 வழிச்சாலை அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்என தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், 8 வழிச்சாலைக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து அறிக்கை வெளியிட்டு, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அவருக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறோம்.

ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், உயர் மின் அழுத்த கோபுரம் போன்ற திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளோடு கைகோர்த்து போராடும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்களை பாராட்டுகிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் கந்தசாமி, நாராயணன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தொடர்ந்து விவசாய நிலங்களை அழித்து பல்வேறு திட்டங்களை கொண்டு வர, மத்திய அரசு துடித்து கொண்டு இருக்கிறது. இதற்கு அதிமுக அரசு உதவியாக இருந்து வருகிறது. விவசாயம் பாதிப்பதாக கூறி, குஜராத்தில் இந்த திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு, தமிழகத்தில் மட்டும் இத்திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருவது ஏன்? தேர்தலில் பாஜவிற்கு தோல்வியை கொடுத்த மாநிலம் என்பதால், வாக்கு எண்ணிக்கை முடிந்த சில நாட்களிலேயே இந்த மேல்முறையீட்டை செய்து தமிழகத்தை வஞ்சிக்கின்றனர்.

இதேபோன்று விவசாயத்தை அழித்து கொண்டே இருப்பதினால், தமிழகம் சோமாலியா நாடு போன்று மாறிவிடும். அதற்கு தான் மத்திய அரசு முயற்சிக்கிறது’’ என்றனர். 4ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி, பசுமைச் சாலை திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் வரும் 4ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு நேற்று போலீசில் மனு அளித்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எனவே, அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Somalia ,Tamil Nadu ,paddy farmers , 8 paddy, agriculture, destroying plan, struggle, peasant agitation
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...