ஜூன் 10ல் பூம்புகாரில் கல்லெடுத்து 12ல் ராசிமணலில் அணை கட்டும் விழிப்புணர்வு பயணம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: வரும் 10ம் தேதி பூம்புகாரில் கல்லெடுத்து 12ம் தேதி ராசிமணலில் அணை கட்டும் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கச்சனத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் ஒன்றிய சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: காவிரியில் மேட்டூர் அணை நிரம்பியபிறகு உபரிநீர் கடலில் கலப்பதை தடுத்து ஒகேனக்கல்லுக்கு மேலே ராசிமணலில் அணை கட்டி தண்ணீரை தேக்கி மேட்டூர் அணைமூலம் பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் காமராஜர் தனது ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டினார்.

அதன்பிறகு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பழநெடுமாறனால் சட்டமன்றத்தில் முன்மொழிந்த தீர்மானம் அனுமதி கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் தற்போது கருத்தொற்றுமையை உருவாக்கும் நோக்கோடு ஜூன் 10ல் பூம்புகாரில் கல்லெடுத்து ஜூன் 12ல் ராசிமணல் அணைகட்டும் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ள உள்ளோம். இப்பயணத்தை தருமபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான் பூம்புகாரில் கல் எடுத்துக் கொடுத்து வைக்கிறார் என்றார்.

Related Stories:

More
>