×

மக்கள் மனதில் உள்ள பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும்: புதிய எம்.பி.க்களுக்கு சோனியா அறிவுரை

 புதுடெல்லி: ‘‘மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் மனதில் உள்ள பிரச்னைகளை, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும்,’’ என சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியை, புதிய எம்.பி.க்கள் 52 பேரும் தேர்வு செய்தனர். அதன்பின், அவர்களிடம் பேசிய சோனியா காந்தி கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், தீவிர எதிர்கட்சியாக பங்காற்ற வேண்டும். மாநிலங்களவையில் நம்முடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் மனதில் உள்ள பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். சீர்த்திருத்த நடவடிக்கைகளில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதில், ஆக்கப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி செயல்படும். ஆனால், மக்களை பிரித்தாளும் மற்றும் பிற்போக்கான நடவடிக்கைகளை நாம் எதிர்ப்போம்.

மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த 12.3 கோடி வாக்காளர்களுக்கு நன்றி. காங்கிரசுக்கு அவர்கள் அளித்த ஓட்டு, நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்க அளிக்கப்பட்ட ஓட்டு. பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான ஓட்டு, சுதந்திரத்துக்கும், சமூகநீதிக்கும் அளிக்கப்பட்ட ஓட்டு. இந்த சிக்கலான நேரத்தில், காங்கிரஸ் முன் எண்ணற்ற சவால்கள் உள்ளன. நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவது பற்றி சில நாட்களுக்கு முன் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கட்சியை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி தைரியமாக போராடி அரசின் தவறுகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியது. இந்த தேர்தலில் தீவிர பிரசாரத்தில் இரவு பகலாக உழைத்த ராகுலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.  
பல மாநிங்களில் காங்கிரஸ் கட்சியை ராகுல் புதுப்பித்துள்ளார். இதனால் சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவராக, கோடிக்கணக்கான வாக்காளர்கள் மற்றும் ஒவ்வொரு கட்சி தொண்டர்களின் அன்பையும், வாழ்த்தையும் ராகுல் பெற்றுள்ளார். அவரது தலைமைக்கு, கடின உழைப்புக்கு, உண்மைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சி அந்தஸ்து கேட்க மாட்டோம்:
காங்கிரஸ் செய்தி தொடர்பளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு 54 எம்.பி.க்கள் தேவை. காங்கிரசிடம் 52 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளதால்,  எதிர்க்கட்சி அந்தஸ்து கோர மாட்டோம்,’’ என்றார்.

Tags : Parliament ,MPs ,Sonia , People, trouble, parliament, new MP, Sonia
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...