×

நாடு முழுவதும் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் குளறுபடியா? 373 எம்பி தொகுதிகளில் ஓட்டுகள் வித்தியாசம்

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 இடங்களில் 373 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் வித்தியாசம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகத்தை கிளப்பி உள்ளன. நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இம்முறை தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் (விவிபேட்) பயன்படுத்தப்பட்டன. ஒரு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடியில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் சீட்டுகள் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால், வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது.

இதையடுத்து, தற்போது தான் முழுமையான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களை ஆய்வு செய்த செய்தி இணையதளம் ஒன்று, வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடி நடந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 373 தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் காஞ்சிபுரம், தர்மபுரி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளிலும், உபியின் மதுராவிலும் அதிக வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 12,14,086 வாக்குகள் பதிவாகி  இருந்தன. ஆனால், 12,32,417 வாக்குகள் எண்ணப்பட்டன. அதாவது, 18,331 வாக்குகள் கூடுதலாக வந்துள்ளது. அதேபோல், தர்மபுரி மக்களவை தொகுதியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் 11,94,440 வாக்குகள் பதிவாகியிருந்தும் 12,12,311  வாக்குகள் எண்ணப்பட்டன. அதாவது, 17,871 வாக்குகள் கூடுதலாக இருந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இயந்திரத்தில் 13,88,666 வாக்குகளும், அதனை எண்ணப்பட்டபோது 14,03,178 வாக்குகளும் இருந்தன. இதில், 14,512  வாக்குகள் கூடுதலாக இருந்தன. மேலும், தென்சென்னை தொகுதியில் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 11,11,681; எண்ணப்பட்ட வாக்குகள்  11,23,410; வித்தியாசம் 11,729 வாக்குகள். திருவள்ளூர் தொகுதியில் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 13,95,121; எண்ணப்பட்ட வாக்குகள் 14,03,349; வித்தியாசம் 8,228 வாக்குகள் என்று புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மதுரா தொகுதியில் இவிஎம் இயந்திரத்தில் 10,88,206 வாக்குகள் பதிவாகியிருந்த போது சுமார் 10,98,112 வாக்குகளும் எண்ணப்பட்டன. அங்கு, 10,906 வாக்குகள் கூடுதலாக இருந்துள்ளன. பீகாரில் அவுரங்காபாத் தொகுதியில் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 9,30,758 வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில் 9,39,526 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் 8,768 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. அருணாச்சல் பிரதேசத்தில் அருணாச்சல் மேற்கு தொகுதியில் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 3,36,161 வாக்குகள் என்றும், ஆனால் எண்ணப்பட்ட வாக்குகள் 3,44,122 வாக்குகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 7,961 வாக்குள் வித்தியாசம் உள்ளது.

அதேநேரத்தில், சில தொகுதிகளில்  ஓட்டு வித்தியாசம் குறைந்தும் உள்ளன. அந்த வரிசையில் திரிபுரா மேற்கு தொகுதியில் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 11,21,138 என்றும், எண்ணப்பட்ட வாக்குகள் 11,01,362 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டு வித்தியாசம் 19,776 குறைந்து வந்துள்ளது. மேலும், புவனேஸ்வர் தொகுதியில் இவிஎம் இயந்திரத்தில் பதிவானது 10,11,754 வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள் 10,03,704. குறையும் வித்தியாசம் 8,050 என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், கோன்ஜார் தொகுதியில் பதிவான வாக்குகள் 11,84,697 என்றும், எண்ணப்பட்ட வாக்குகள் 11,73,526 என்றும் குறைந்த வித்தியாசம் 11,171 வாக்குகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாடு முழுவதும் தேர்தல் நடந்த 542 மக்களவை தொகுதிகளில் 373 தொகுதிகளில் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் கூடுதலாகவும், குறைவாகவும் குளறுபடியாக உள்ளது. இதில், வாக்கு வித்தியாசம் அதிகபட்சமாக அதாவது கூடுதலாக மட்டும் 220 தொகுதிகளில் உள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை விஷயத்தில் நிறைய குளறுபடிகள் நடத்துள்ளதாகவும், பாஜ கூட்டணி வெற்றியில் சந்தேகம் இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

எந்த குளறுபடியும் இல்லை தேர்தல் ஆணையம் விளக்கம்:
இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘‘தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்குகள் எண்ணிக்கை இடைக்காலத்திற்குரியது. அது இறுதியானது அல்லது. அனைத்து தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் முழுமையாக பெறப்பட்டு இறுதி வாக்குகள் எண்ணிக்கை விரைவில் வெளியிடப்படும். இதுபோன்ற இடைக்கால எண்ணிக்கையின் வாக்குகளில் வித்தியாசம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு முன் நடந்த தேர்தல்களில் இறுதியான வாக்கு எண்ணிக்கை விபரம் வெளியிட மாதக்கணக்கில் ஆகும்.

கடந்த 2014 தேர்தலில் கூட தேர்தல் முடிவு வெளியான பிறகு 2, 3 மாதம் கழித்தே இறுதி வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டது. தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டால், முடிவு வெளியான சில நாட்களில் இறுதி வாக்கு எண்ணிக்கையை வெளியிட முடியும். அதன்படி இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இத்தகவல்கள் வெளியிடப்படும்’’ என தெரிவித்துள்ளது.

Tags : country ,constituencies , Throughout the country, the number of votes, messy? 373 MB, votes, difference
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...