10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி இலங்கையை நொறுக்கியது நியூசிலாந்து:ஹென்றி அபார பந்துவீச்சு

கார்டிப்: இலங்கை அணியுடனான ஐசிசி உலக கோப்பை லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சோபியா கார்டனில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இலங்கை தொடக்க வீரர்களாக திரிமன்னே, கேப்டன் கருணரத்னே களமிறங்கினர். திரிமன்னே 4 ரன் மட்டுமே எடுத்து ஹென்றி வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார்.
அடுத்து கருணரத்னேவுடன் குசால் பெரேரா ஜோடி சேர்ந்தார்.

பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தனர். குசால் பெரேரா 29 ரன் எடுத்து (24 பந்து, 4 பவுண்டரி) ஹென்றி பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் வசம் பிடிபட்டார். குசால் மெண்டிஸ் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். தனஞ்ஜெயா டிசில்வா 4 ரன் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் 9 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஜீவன் மெண்டிஸ் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 15.2 ஓவரில் 60 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், கேப்டன் கருணரத்னே - திசாரா பெரேரா ஜோடி 7வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 52 ரன் சேர்த்தது. திசாரா 27 ரன் எடுத்து (23 பந்து, 2 சிக்சர்) சான்ட்னர் பந்துவீச்சில் போல்ட் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய கேப்டன் கருணரத்னே அரை சதம் அடித்தார். இசுரு உடனா 0, சுரங்கா லக்மல் 7, மலிங்கா 1 ரன்னில் அணிவகுக்க, இலங்கை அணி 29.2 ஓவரில் 136 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கருணரத்னே 52 ரன்னுடன் (84 பந்து, 4 பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் ஹென்றி, பெர்குசன் தலா 3, போல்ட், கிராண்ட்ஹோம், நீஷம், சான்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மார்டின் கப்தில், கோலின் மன்றோ இருவரும் துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். நியூசிலாந்து அணி 16.1 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 137 ரன் எடுத்து அபாரமாக வென்றது.
கப்தில் 73 ரன் (51 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), மன்றோ 58 ரன்னுடன் (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேட் ஹென்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Tags : New Zealand , 10 wickets, great victory, Sri Lanka, New Zealand, Henry, great bowling
× RELATED நியூசிலாந்து டூர்: இந்திய அணி இன்று தேர்வு