×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஹாலெப்: சிட்சிபாஸ் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோவுடன் (27வது ரேங்க்) நேற்று மோதிய ஹாலெப் (3வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 55 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

ஒசாகா அதிர்ச்சி: மற்றொரு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 4-6, 2-6 என்ற நேர் செட்களில் கேதரினா சினியகோவாவிடம் (செக்.) தோல்வியைத் தழுவினார். அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் அன்னா பிளிங்கோவாவை (ரஷ்யா) வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-5, 6-3, 6-7 (5-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் 3 மணி, 34 நிமிடம் போராடி பிலிப் கிராஜினோவிச்சை (செர்பியா) வீழ்த்தினார்.

நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தனது 3வது சுற்றில் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சால்வடோர் கருசோவை (இத்தாலி) எளிதாக வென்றார். முன்னணி வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), பேபியோ பாக்னினி (இத்தாலி) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். பயஸ் ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பெனாய்ட் பேர் (பிரான்ஸ்) ஜோடி 0-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் செபாஸ்டியன் கபால் - ராபர்ட் பாரா ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

Tags : round , French, Open Tennis, 4th round, Halleb, Siddipas, Progress
× RELATED கலந்தாய்வு மூன்றாம் சுற்று முடிவில்...